வேலவன் ஸ்டோர்ஸ்ஸில் ரூ.4.22 லட்சம் மோசடி செய்த இசக்கிராஜ், மிரட்டி வருவதாக எஸ்பி’யிடம் வணிகர் சங்கம் புகார்
தூத்துக்குடி வேலவன் ஸ்டோர்ஸ் ஜுவல்லரி நிறுவனத்திடம் ரூ.4.22 லட்சம் பெற்றுக் கொண்ட வாடிக்கையாளர், 5 பவுன் நகையை ஒப்படைக்காமல், அவதூறு பரப்பி மிரட்டுவதாக எஸ்பி’யிடம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு புகார்
தூத்துக்குடி ஜின் பேக்டரி ரோட்டில் செயல்பட்டு வரும் வேலவன் ஸ்டோர்ஸ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திடம் ரூ.4.22 லட்சம் பெற்றுக்கொண்டு, அடமானத்தில் இருந்ததாக கூறப்படும் 5 பவுன் தங்க நகையை நிறுவனத்திடம் ஒப்படைக்காமல் ஏமாற்றியதாக கூறப்படும் நபர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
புகார் மனுவில், தூத்துக்குடி 3-வது மைல் பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜ் என்பவர் வேலவன் ஸ்டோர்ஸ் ஜுவல்லரி நிறுவனத்தின் வாடிக்கையாளர் என்றும், கடந்த 11.09.2026 அன்று கடைக்கு வந்த அவர், சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 5 பவுன் தங்க நகையை முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் அடமானம் வைத்திருப்பதாகவும், நகையில் எடை குறைவு இருப்பதாக ஆடிட்டிங்கில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அடமான நகையை மீட்டு நிறுவனத்திடம் ஒப்படைத்தால் பரிசோதனை செய்து, எடை குறைவு இருந்தால் அதற்கேற்ப புதிய நகை வழங்குவதாக நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நகையை மீட்க தன்னிடம் பணம் இல்லை என இசக்கிராஜ் தெரிவித்ததைத் தொடர்ந்து, நிறுவனத்தின் ஒப்புதலுடன் மேலாளர் சரவணக்குமார் ரூ.4,22,000-ஐ அவரது வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது.
பின்னர் நகையை மீட்டு கடைக்கு கொண்டு வந்த இசக்கிராஜ் முன்னிலையில் அது பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அப்போது நகையின் தரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், நகையை நிறுவனத்திடம் ஒப்படைக்காமலும், பெற்ற ரூ.4,22,000-ஐ திருப்பிச் செலுத்தாமலும் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சரவணக்குமார் அளித்த புகார், தூத்துக்குடி மத்திய பாக காவல் நிலையத்தில் CSR No.584/2026 ஆக பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் மற்றும் சில யூடியூப் சேனல்களில் வேலவன் ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தகவல்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும், அவற்றின் உண்மைத் தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வணிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 4 அல்லது 5 நாட்களில் 200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள நகைகளை நிறுவனத்தில் பரிசோதனை செய்ததாகவும், எவ்வித குறைபாடும் இல்லை என தெரிவித்துள்ளதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூறியுள்ளது.
எனவே, புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நபர் மீது உரிய விசாரணை நடத்தி சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், ரூ.4.22 லட்சத்தை மீட்டுத்தரவும், சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகள் குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என எஸ்பி’யிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
