செய்திகள்அண்மை செய்திகள்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வியாபாரிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும். வேலவன் ஸ்டோர்ஸில் விக்ரமராஜா பேட்டி

Share the news

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வியாபாரிகளுக்கு எப்போதும் பாதுகாப்பாக இருக்கும். தூத்துக்குடி வேலவன் ஸ்டோர்ஸில் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா பேட்டி

தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் தங்க நகை கடையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட தாலி செயினின் தரம் சம்பந்தமாக எழுந்த மிரட்டல் தொடர்பாக வேலவன் ஸ்டோர்ஸ் மேலாளர் சரவணக் குமார், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், 3 வது மைல் இசக்கி ராஜா என்ற நபர் ரூ.1கோடி பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ள நிலையில், தூத்துக்குடி மத்திய பாக காவல் நிலையத்தில் CSR No.584/2026 பதிவு செய்யப்பட்டு, 3 வது மைல் இசக்கி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா, தூத்துக்குடி வேலவன் ஸ்டோர்ஸ் ஜுவல்லரிக்கு நேரில் சென்று கடை மேலாளர் சரவணனிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து இது குறித்து விளக்கமளித்தார். அப்போது விக்ரமராஜா கூறுகையில்:
“தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பைப் பொறுத்தவரை, சாதி, மதம் உள்ளிட்ட வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, வணிகர்கள் அனைவரையும் ஒரு தாய் பிள்ளைகளாகவே கருதுகிறோம். வணிகர்களுக்கு எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும், அவர்களுக்கு பாதுகாப்பாக வணிகர் சங்கம் இருக்கும். இந்த விவகாரம் தொடர்பாக சிலர் சாதிய உணர்வுடன் சமூக வலைதளங்களில் கருத்துகளை வெளியிட்டு வருவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இந்தப் பிரச்சினையை சாதிய கண்ணோட்டத்தில் பார்ப்பதை நண்பர்கள் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில், ஏதேனும் வணிக நிறுவனம் தவறு செய்திருந்தாலும், அதையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தட்டிக் கேட்கும். எனவே, இந்த விவகாரத்தை வணிக நிறுவனம் தொடர்பான பிரச்சினையாக மட்டுமே பார்க்க வேண்டும். சாதி, மதம், மொழி, இனம் போன்றவற்றை இதில் கொண்டுவர வேண்டாம். மாநிலத்தில் எந்தப் பகுதியில் வணிகர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டாலும், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நேரில் சென்று அவர்களுக்கு ஆதரவாக நிற்கும். அதன்படியே தூத்துக்குடிக்கும் வந்துள்ளேன். இந்த விவகாரத்தில் சாதியை வைத்து பிரச்சினையை திசைதிருப்பாமல், வணிகர்கள் என்ற நோக்கத்துடன் அனைவரும் செயல்பட வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தும். யாராக இருந்தாலும் தவறு செய்திருந்தால், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சட்டப்படி முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன