தூத்துக்குடியில் தீவிர டெங்கு தடுப்பு மற்றும் தூய்மைப் பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள், கழிவு நீர், குப்பை அகற்றும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், ஆணையர் சி.ப்ரியங்கா ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா முன்னிலையில், டெங்கு தடுப்புப் பணிகள், கழிவுநீர் அகற்றும் பணி மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி 39-வது வார்டு பத்ரகாளியம்மன் கோவில் தெரு மற்றும் 31-வது வார்டு அண்ணா நகர் 6-வது தெரு ஆகிய பகுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்துப் பெறும் பணிகள், மாநகராட்சிப் பணியாளர்கள் மூலம் கால்வாய்களில் தேங்கியுள்ள கழிவுகள் அகற்றப்படும் பணிகள், சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விதம் ஆகியவற்றை அவர்கள் பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்ததாவது:
”பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேங்காய் சிரட்டைகள், டயர்கள், ஆட்டுக்கற்கள், உரல்கள் மற்றும் பாட்டில்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குடிநீரைச் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடிப் பாதுகாக்க வேண்டும். குடிநீரைக் கொதிக்க வைத்துப் பாதுகாப்பான முறையில் குடிக்க வேண்டும். மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்து வழங்க வேண்டும்” என்று ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் யாழினி, வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின், மாநகராட்சி துணை ஆணையர் வெங்கட்ராமன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், சுகாதார அலுவலர் ஹரிகணேஷ் மற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள் உடனிருந்தனர்.
