விவசாயிகளுக்கு ஓய்வூதியம், பயிர் கடன் முழு தள்ளுபடி வேண்டும். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம்
தூத்துக்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 31-வது மாநில மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ஓய்வூதியம், பயிர்கடன் முழு தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
தூத்துக்குடி ஏவிஎம் மஹாலில் தோழர் என்.சங்கரைய்யா அரங்கத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 31-வது மாநில மாநாடு செப்டம்பர் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில், விவசாயிகள் சங்க அகில இந்தியத் துணைத் தலைவர் சண்முகம், சி.ஐ.டி.யு.மாநிலப் பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விவசாயிகள் சங்க அகில இந்தியத் துணைத் தலைவர் ஹன்னன் முல்லா சிறப்புரையாற்றி மாநாட்டை நிறைவு செய்து வைத்தார்.
இம்மாநாட்டில் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி நடராஜன், அகில இந்திய மற்றும் மாநில நிர்வாகிகளான ரவீந்திரன், கே.பி. பெருமாள், பி.பெருமாள், டெல்லி பாபு, கே.பி. ஆறுமுகம், புவிராஜ் உட்பட்ட தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மாநாட்டின் நிறைவாக தமிழ்நாடு முதலமைச்சரின் தேர்தல் கால வாக்குறுதியின்படி, விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். அடையாள எண் மூலம் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை வழங்கும். திட்டத்தை கைவிட வேண்டும், நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் உணவு வழங்கும் விவசாயிகளையும் விவசாய உற்பத்தி முக்கிய பங்காற்றும் தொழிலாளர்களையும் சமூக பாதுகாப்புடன் பாதுகாக்க அவர்களுக்கு வயதுவரம்பு நிபந்தனைகள் இன்றி மாதந்தோறும் ரூபாய் 5000 ஓய்வூதியம் வழங்க வேண்டும், மேலும் மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் ரயிலில் பயணம் செய்ய வசதியாக முன்பு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை மத்திய மற்றும் மாநில அரசுகள் உறுதியுடன் நிலைநாட்ட வேண்டும்.
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பயிர் காப்பீட்டு நிறுவனத்தை மாநில அரசே சொந்தமாகத் தொடங்க வேண்டும். பெண் விவசாயிகளின் நில உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் விவசாயத் துறை சார்ந்த பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
