செய்திகள்அண்மை செய்திகள்

திருச்செந்தூரில் கட்டண தரிசனத்தில் முறைகேடு பாஜக சித்ராங்கதன் கண்டனம்

Share the news

திருச்செந்தூர் கோயிலில் கட்டண தரிசனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்

திருச்செந்தூர்,
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்து வழிபடுகின்றனர். இதற்கான கட்டண தரிசனத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்;
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.100 கட்டண தரிசனத்தில் போலி ரசீது வழங்கி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக செய்தித்தாள் வழியாக அறிந்தேன் இந்த சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்
.

தூத்துக்குடி மாவட்டத்தின் அடையாளமாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கோடை விடுமுறையை முன்னிட்டு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், அவர்களின் ஆன்மீக உணர்வுகளை சுரண்டும் வகையில் போலி ரசீது மோசடி நடைபெற்றிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
முதற்கட்ட விசாரணையில் ஒரு பெண் பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவரிடமிருந்து பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஒரு சாதாரண தற்காலிக பணியாளரால் மட்டும் இவ்வளவு பெரிய அளவிலான மோசடியை தனியாக மேற்கொள்ள முடியாது. இதன் பின்னணியில் பெரிய அளவிலான மோசடி கும்பல் செயல்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இந்த முறைகேட்டின் பின்னணியில் உள்ள அதிகாரிகள் யார், உண்மையான குற்றவாளிகள் யார் என்பது முழுமையாக வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும். லட்சக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், சில ஆயிரம் ரூபாய் மட்டுமே மோசடி நடந்ததாக கணக்கு காட்டி, இந்த விவகாரத்தை மூடி மறைக்க கோயில் நிர்வாகமும் இந்து சமய அறநிலையத்துறையும் முயற்சிப்பதாக சந்தேகம் எழுகிறது
.

மேலும், கடந்த ஆட்சிக்காலத்திலிருந்தே இக்கோயிலில் இதுபோன்ற போலி ரசீது புழக்கம் இருந்ததா என்ற கோணத்திலும் விரிவான தணிக்கை மற்றும் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். எனவே, இந்த மோசடி சம்பவத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். அதேபோல் திருச்செந்தூர் கோயிலில் வேறு ஏதேனும் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ளனவா என்பதையும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று பிஜேபி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வலியுறுத்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன