செய்திகள்அண்மை செய்திகள்உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் நடைபெற்ற கபடி போட்டியில் கரூர் சேரன், ஈரோடு பிகேஆர் கல்லூரி அணிகள் சாம்பியன்

Share the news

தூத்துக்குடியில் மாநில அளவில் நடைபெற்ற முருகேசன் நாடார் நினைவு கபடி போட்டியில் கரூர் சேரன், ஈரோடு பிகேஆர் கல்லூரி அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றன.

தூத்துக்குடி தாமோதரன் நகர் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு, மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் மற்றும் சண்முகபுரம் கபடி கிளப் சார்பில், மாநில அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ‘முருகேசன் நாடார் 2-ஆம் ஆண்டு நினைவு கோப்பை’ மின்னொளி கபடி போட்டி கோவில் திடலில் விமரிசையாக நடைபெற்றது.
​மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை, ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 14 முன்னணி கல்லூரி அணிகள் லீக் முறையில் களம் கண்டன.

பரபரப்பான இறுதி ஆட்டங்கள்
​மாணவர் பிரிவு: விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் கரூர் சேரன் கல்லூரி அணியும், சென்னை லயோலா கல்லூரி அணியும் மோதின. கடைசி வினாடி வரை நீடித்த கடும் போராட்டத்தின் முடிவில் கரூர் சேரன் கல்லூரி அணி 26–25 என்ற புள்ளிக்கணக்கில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
பெண்களுக்கான இறுதி ஆட்டத்தில் தென்காசி வியாசா கல்லூரி அணியை எதிர்த்து ஈரோடு பி.கே.ஆர். கல்லூரி அணி மோதியது. இதில் அபாரமாக ஆடிய ஈரோடு பி.கே.ஆர். கல்லூரி அணி 38–30 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

பரிசளிப்பு விழா
போட்டியைத் தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழாவில், இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன் ராஜரத்தினம், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் உதவி துணைத் தலைவர் கவாஸ்கர், மண்டல மேலாளர் பரணிதரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரத்தின ராஜ், விஜயராகவன் ஆகியோர்கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்குக் கோப்பைகள் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினர்.
​இந்நிகழ்வில் கபடி கந்தன், ஸ்டீபன், கபடி பிரின்ஸ் கந்தன், கோவில் கமிட்டி தலைவர்கள் வெள்ளத்துரை, வெற்றிவேல், செயலாளர் அந்தோணி ராஜ், பொருளாளர் சடகோபன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். மின்னொளியில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளைத் ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன