தூத்துக்குடி பாஜக விவசாய அணி உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0’க்கு ஆதரவாக தீர்மானம்
தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி ஆலோசனை கூட்டத்தில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில், பா.ஜ.க. விவசாய அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளின் நலன் சார்ந்த மூன்று முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0-க்கு ஆதரவு:
விவசாயிகளுக்கு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், விற்பனை உள்ளிட்ட அனைத்துத் துறை தகவல்களையும் ஒருங்கிணைத்து வழங்கவும், அலுவலர்கள் நேரடியாக விவசாயிகளின் வயல்வெளிகளுக்கே சென்று ஆலோசனைகள் வழங்கவும் ‘உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0’ பெரிதும் உதவுகிறது. இத்திட்டத்திற்கு தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பா.ஜ.க. விவசாய அணி இத்திட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிக்கிறது. நடைமுறைச் சிக்கல்கள் இருந்தால் அரசுடன் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர, விவசாயிகளுக்குப் பயனளிக்கும் திட்டங்களை எதிர்க்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.
பி.எம். கிசான் சிறப்பு முகாம்:
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதியை முன்னிட்டு, ‘பிரதமர் கிசான் சம்மான் நிதி’ திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி பெறாமல் விடுபட்டுள்ள தகுதியான விவசாயிகளைக் கண்டறிந்து, அவர்களை இணைப்பதற்கான சிறப்பு முகாம்களை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டங்களில் பங்கேற்பு:
மாவட்ட நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பா.ஜ.க. விவசாய அணி நிர்வாகிகள் கலந்துகொண்டு விவசாயிகளின் களப் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்திற்கு விவசாய அணி மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், பாஜக மாவட்டத் துணைத் தலைவர் சிவராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
இதில் துணைத் தலைவர்கள் முத்துலிங்கம், முண்டசாமி, மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், மண்டல் தலைவர்கள் சிவந்திவேல், பேச்சிமுத்து, செந்தில்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மத்திய அரசின் நலத்திட்டங்களை கடைக்கோடி விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் கிராமப்புறங்களில் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
