தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தடையற்ற தூய்மைப் பணிகள், எல்.ஆர் காப்பி சிக்கல்கள் நீக்க மேயர் ஜெகன் உத்தரவு
வடிகால் தூர் வாருதல், குப்பை சேகரிக்கும் பணிகள் தடையின்றி நடைபெறவும். பொதுமக்கள் நன்மை கருதி பத்திரப் பதிவு செய்ய நில உரிமை ஆவணம் எல்ஆர் விரைந்து கிடைக்க மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவு
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம், மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தை துவக்கி வைத்து பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்; தூத்துக்குடி மாநகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது மழைக்கால முன்னெச்சரிக்கையாக பக்கிள் ஓடை தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும், 7 குளங்கள் சீரமைக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக கூறினார். மாநகரில், 23,000 தெருவிளக்குகள் அமைத்து பராமரிக்கப்பட்டு வருவதுடன், கூடுதலாக 2,200 விளக்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும், மாநகரில் 53 பூங்காக்கள் பயன்பாட்டில் உள்ளது இதில் சிறப்பு அம்சமாக மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க விளையாட்டு திடலும் அமைக்கப்பட்டது. புதிய துறைமுகம் கடற்கரையில் பிரம்மாண்ட பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது என்று மேயர் தெரிவித்தார்.
தொடர்ந்து, மூத்த உறுப்பினர் கனகராஜ் பேசுகையில், பத்திரப் பதிவுக்காக மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வந்த நில உரிமை ஆவணம் எல்.ஆர். காப்பி நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்; மீண்டும் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் மோட்டார்களை அகற்ற வேண்டும் என்ற ஆணையாளர் அறிவிப்பு பொதுமக்கள் – மாநகராட்சி மோதல் போக்கை உருவாக்கும் என்பதால் இதனை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
உறுப்பினர்கள் தனலட்சுமி, ரெக்ஸ்லின், சுரேஷ்குமார், கந்தசாமி, சந்திரபோஸ் ஆகியோர், கடந்த மூன்று மாதங்களாக பல பகுதிகளில் வடிகால் தூர்வாரப்படாமலும், குப்பைகள் முறையாகச் சேகரிக்கப்படாமலும் உள்ளது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது இதனை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த மேயர் ஜெகன் பெரியசாமி, “என்ன மாற்றம் வந்தாலும் மக்களுக்கான சேவைகள் தடையின்றி நடைபெறும். சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணியில் எந்தத் தொய்வும் ஏற்படக்கூடாது” என அதிகாரிகளிடம் உறுதியாக வலியுறுத்தினார். மேலும், வடிகால் தூர்வாருதல், குப்பை சேகரிப்பு பணிகளை வார்டு வாரியாக முறைப்படுத்தி சுகாதாரத்தை காக்கவேண்டும், பொதுமக்கள் நன்மை கருதி நடைமுறைச் சிக்கல்களை நீக்கி மக்களுக்கு எல்.ஆர். காப்பி விரைந்து கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மண்டலத் தலைவர் கலைச்செல்வி, உதவி ஆணையர்கள் வெங்கட்ராமன், லெனின், மாநகர அமைப்பு அலுவலர் அஷார், மாநகர் நல அலுவலர் கணேஷ், சுகாதார அலுவலர்கள் ஹரிகணேஷ், ராஜபாண்டி, ஸ்டாலின் பாக்கியநாதன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
