செய்திகள்அண்மை செய்திகள்

மதர் டிரஸ்ட்டின் 10 லட்சம் பனை விதை நடும் பணி அமைச்சர் ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார்

Share the news

திருச்செந்தூர் குரங்கன்தட்டில் மதர் டிரஸ்ட் சார்பில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியின் தொடர்ச்சியாக இன்று 10 லட்சம் பனை விதை நடும் பணி அமைச்சர் ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார்

திருச்செந்தூர்,
தமிழ்நாட்டின் கற்பகதருவான பனை மரங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியின் தொடர்ச்சியாக, 2026-2027 ஆம் ஆண்டிற்கான 10 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி மற்றும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா திருச்செந்தூர் வட்டம் குரங்கன்தட்டு கிராமத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.
​
​திருச்செந்தூர் தாலுகா அம்மன்புரம் அருகிலுள்ள குரங்கன்தட்டு சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற பனை விதைகள் விதைப்பு, மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பனை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் உள்ளிட்ட இந்த முப்பெரும் விழாவில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். பின்னர் சமுதாய நலக்கூட வளாகத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டு அமைச்சர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சீமவாடி குளத்தங்கரை ஓரத்தில் பனை விதைகளை விதைத்து, 10 லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தை அமைச்சர் ஸ்ரீநாத் முறைப்படி தொடக்கி வைத்து கூறியதாவது:
​”இயற்கை வளங்களை பாதுகாக்கவும், புயல் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து கடற்கரை ஓரங்கள், நீர்நிலைகளைக் காக்கவும் பனை மரங்கள் அவசியமானவை. மண்ணரிப்பைத் தடுத்து நிலத்தடி நீரை மேம்படுத்தும் தமிழர்களின் தேசிய மரமான பனையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், மதர் சமூக சேவை நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து ஒரு கோடி பனை விதைகளை விதைத்து வருவது போற்றத்தக்கது என அமைச்சர் ஸ்ரீநாத் கூறினார்.

​விழாவில் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்தின் மாநிலத் தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குநருமான டாக்டர் எஸ்.ஜே. கென்னடி தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச்செயலாளர் சொ.சு. தமிழினியன் அனைவரையும் வரவேற்றார். துணைத் தலைவர் சுதாகர் முன்னிலை வகிக்க, திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்டோ வாழ்த்துரை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் பானுமதி நன்றியுரை கூறினார்.
​மதர் பனைப்பொருள் உற்பத்தியாளர் குழு பெண்கள் சார்பில், அமைச்சர் ஸ்ரீநாத்திற்கு பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட ‘பனை ஓலை மாலை’ அணிவித்தும், மலர் கிரீடம் மற்றும் நினைவுப் பரிசு வழங்கியும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
​இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் பிரைட்டர், ஒன்றிய செயலாளர் நீதி பால கார்த்தி, குரங்கன்தட்டு ஊர் தலைவர் அரவிந்த், மற்றும் இயக்கத்தின் நிர்வாகிகளும், சுயஉதவிக்குழு பெண்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன