ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளியில் ஆண்டு விழா சாதனை மாணவர்களுக்குப் பாராட்டு
விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளியில் 13வது ஆண்டு விழா.
மார்கண்டேயன் எம்.எல்.ஏ, எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பங்கேற்பு.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள ஸ்ரீ அம்பாள் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் 13-ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்குப் பள்ளிக் கல்விக் குழுமத் தலைவர் வீமராஜ் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், பள்ளிச் செயலாளர் சுப்பாரெட்டியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் அமராவதி ஆண்டறிக்கை வாசித்தார்.
இந்நிகழ்வில் சாகித்திய அகாதமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையில், மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ளப் பாடப்புத்தகங்களைத் தாண்டி வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், நற்பண்புகளுடன் கூடிய கல்வியே நிலையான வெற்றியைத் தரும் என்றும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. விழாவின் நிறைவாக மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பள்ளி நிர்வாக அதிகாரி கணேசன், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளைப் பள்ளி நிர்வாகக் குழுவினரும் ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.
