மாணவர்கள் புரிந்து படிக்க வேண்டும் காஃபி வித் கலெக்டர் நிகழ்வில் விஷு மகாஜன் அறிவுரை
தூத்துக்குடியில் நடைபெற்ற ‘காஃபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சியில்
மாணவர்கள் எதையும் ஆழ்ந்து புரிந்து படித்தால் மட்டுமே கல்வியை எளிதாக உள்வாங்க முடியும் என்று கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்தார்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளி மாணவ-மாணவியரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ‘Coffee with the Collector’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வல்லநாடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியருடன் கலந்துரையாடினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பேசியதாவது:
“மாணவர்களாகிய நீங்கள் பாடங்களைப் படிக்கும்போது ஆழ்ந்த புரிதலுடன் படிக்க வேண்டும். தொடக்கத்தில் அனைத்துப் பாடங்களும் புதியதாகத் தோன்றினாலும், அவற்றின் பின்னணியைப் புரிந்து படித்தால் மிக எளிதாக மனதில் பதியும். மேலும், எந்த ஒரு செயலைச் செய்யும்போதும் அதைத் தீர ஆராய்ந்து, முழு கவனத்துடன் செயல்படப் பழகிக்கொள்ள வேண்டும்.”
யு.பி.எஸ்.சி தேர்வுக்கு வழிகாட்டல்
தொடர்ந்து யு.பி.எஸ்.சி (UPSC) போன்ற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிய அவர், “போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக விரும்பும் மாணவர்கள் நாள்தோறும் நாளிதழ்களை வாசித்து நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக அறிவியல், விளையாட்டு, வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து படித்து வந்தால் போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ள முடியும்” என்று ஊக்கப்படுத்தினார்.
மேலும், மாணவர்களின் விளையாட்டுத் திறன், கல்விச் சுற்றுலா திட்டமிடல் மற்றும் பள்ளியின் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
முன்னதாக, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பல்வேறு துறை அலுவலகங்களுக்கு மாணவர்கள் நேரில் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அரசுத் துறைகளின் செயல்பாடுகள், மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து துறைசார் அலுவலர்களிடம் மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டறிந்து பயன்பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, மாவட்ட கல்வி அலுவலர் முனியசாமி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
