மதர் டிரஸ்ட் சார்பில் காமராஜர் கல்லூரியில் போதை–புகையிலை ஒழிப்பு கருத்தரங்கம்
மதர் டிரஸ்ட் சார்பில் போதை – புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம். போதையில்லா தமிழ்நாடு, புகையிலை இல்லா தூத்துக்குடியை உருவாக்க மாணவர்கள் உறுதியேற்பு
தூத்துக்குடி,
மதர் சமூக சேவை நிறுவனம், தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இணைந்து நடத்திய போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
மதர் சமூக சேவை நிறுவன இயக்குநரும், மாவட்ட சுகாதாரப் பேரவை மற்றும் மாவட்ட புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வுக் குழு உறுப்பினருமான டாக்டர் எஸ்.ஜே. கென்னடி தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு, கருத்தரங்கைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மதுவிலக்கு பிரிவு துணை கண்காணிப்பாளர் குருவெங்கட்ராஜ், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா ஆகியோர் போதைப்பொருட்கள் மற்றும் மதுப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடம் விளக்கினர். பொது சுகாதாரத்துறை மருத்துவ அலுவலர் மருத்துவர் பி. இனிகோ, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டுப் பிரிவு சமூகப் பணியாளர் வ. ரொசாரி பாத்திமா ஆகியோர் ஒலி-ஒளி காட்சிகள் மூலம் போதைப் பழக்கத்தால் ஏற்படும் நோய்கள் மற்றும் சிகிச்சைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து, மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ். பானுமதி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில், காமராஜ் கல்லூரி மாணவ-மாணவிகள் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
“போதைப்பொருட்கள், புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபானங்களை வாழ்நாளில் தொட மாட்டோம். சமூகத்தில் போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி, போதையில்லா தமிழ்நாட்டையும், புகையிலை இல்லா தூத்துக்குடியையும், உருவாக்க பாடுபடுவோம்” என மாணவர்கள் உறுதியேற்றனர்.
நிகழ்ச்சியில் காமராஜ் கல்லூரி முதல்வர் பானுமதி, போதைப்பொருள் ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர் மா. அய்யனுராஜ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பா. ஆனந்த், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
