எஸ்ஐஆர் குறித்து காங்கிரஸும் எதிர்கட்சிகளும் மக்களை குழப்புவதாக பாஜக விவேகம் ரமேஷ் பேட்டி
தேர்தல் ஆணையம் – எஸ்ஐஆர் குறித்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களைக் குழப்பி வருவதாக, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ் குற்றம்சாட்டினார்
தூத்துக்குடி:
தேர்தல் ஆணையம் மற்றும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீரமைப்பு (SIR) குறித்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களைக் குழப்பி வருவதாக, பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ் குற்றம்சாட்டினார்.
தூத்துக்குடியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ் கூறுகையில்:
தேர்தல் ஆணையம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும் சுதந்திரமான அமைப்பாகும். ஆனால், தேர்தல் ஆணையம் குறித்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
எஸ்ஐஆர் சீரமைப்பின் மூலம் 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆதாரமில்லாமல் கூறி வருகின்றன. இதனை முன்வைத்து ராகுல் காந்தி உள்ளிட்டோர் மாவட்ட அளவில் போராட்டங்களையும் நடத்துகின்றனர். இதன் மூலம் வாக்குரிமை மற்றும் தேர்தல் ஆணையம் குறித்த மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
எஸ்ஐஆர் படிவத்தின் மூலம் தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்; தகுதியற்றவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக மக்களுக்கு தேவையான அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகள் மற்றும் முறையீடுகளைத் தெரிவிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
எஸ்ஐஆர் திருத்தம் பாஜகவுக்கு ஆதரவானது என்றும், பட்டியலின மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரானது என்றும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் பொய் கருத்துகளைப் பரப்பி வருகின்றன. இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தேர்தல் மற்றும் ஜனநாயகம் குறித்த மக்களின் நம்பிக்கையை பாதிக்கும்.
பாஜகவைப் பொறுத்தவரை, தகுதியான எந்த வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக் கூடாது; அதேநேரத்தில் தகுதியற்ற வாக்காளர்களும் பட்டியலில் இடம்பெறக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இவ்வாறு விவேகம் ரமேஷ் தெரிவித்தார்.
பேட்டியின்போது பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.எம். ராஜேஷ், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், கிழக்கு மண்டல தலைவர் சண்முக சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.
