இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு – நாம் இந்தியர் தலைவர் என்.பி.ராஜா பேட்டி
ஊழல், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இயலாத தவெக அரசின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை. இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு – நாம் இந்தியர் கட்சி தலைவர் என்.பி.ராஜா பேட்டி
தூத்துக்குடியில் நாம் இந்தியர் கட்சியின் நிறுவனத் தலைவர் என்.பி.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:
தற்போது நடந்து கொண்டிருக்கும் தவெக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. விலைவாசி உயர்வால் மக்கள் நாளுக்கு நாள் அவதிப்படுகின்றனர், அதை கண்டு கொள்ளாத அரசாக தவெக இருக்கிறது; ஊழலை ஒழிப்பேன் என்று ஆட்சிக்கு வந்தார்கள் ஆனால் சில துறைகளில் ஊழல் பல மடங்கு பெருகி உள்ளது, அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பொதுவாக, தவெக அரசிடம் மக்களுக்கான சேவை மனப்பான்மையும் இல்லை, பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய அனுபவமும் இல்லை.
எதிர்கட்சியினரை பழிவாங்கும் போக்கில் அரசு செயல்படாமல், மாநிலத்தின் வளர்ச்சிப் பாதையில் கவனம் செலுத்த வேண்டும்.
முதலமைச்சரின் லண்டன் பயணம் நடிகர் அஜித்தின் கார் ரேஸ் ப்ரமோ நிகழ்ச்சிக்கானதா? நடிகர் அஜித்தின் ஆதரவு வேறு பக்கும் போய்விடக் கூடாது என்ற நோக்கில் முதலமைச்சர் விஜய் செயல்படுவதாக சந்தேகம் உள்ளதாக என்.பி.ராஜா கூறினார்.
மேலும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாம் இந்தியர் கட்சி சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கடிதம் வழங்கப்பட்டுள்ளதுடன், விரைவில் நேரில் சந்திப்பும் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அதிமுக நிச்சயமாக வெற்றி பெறும்.
தூத்துக்குடியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்ட தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்தை அமைத்து, தென்தமிழகத்தின் வளர்ச்சிக்கு அரசு வழிவகை செய்ய வேண்டும். தூத்துக்குடியில் மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் அனல் மின் நிலையம் தேவையா என்பதை அரசு ஆய்வு செய்து, மாற்று மின் உற்பத்தியை உருவாக்க வேண்டும் என்று என்.பி.ராஜா கூறினார்.
இந்தச் சந்திப்பின் போது மாநிலச் செயலாளர் பொன்ராஜ், மாநிலப் பொருளாளர் பேரூரணி து.ஜெய்கணேஷ், தெற்கு மாவட்ட செயலாளர் சங்கரன், வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சுந்தர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
