ஜூலை 26ல் பனிமய மாதா திருவிழா! ஆலய அதிபர் பேட்டி.
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய பெருவிழா ஜூலை 26ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது – ஆலய அதிபர் ஜான் செல்வம் பேட்டி
தூத்துக்குடி மாநகரின் பிரதான அடையாளமாகவும், தமிழ்நாட்டில் திருத்தந்தையால் (போப்) அங்கீகரிக்கப்பட்ட 10 பேராலயங்களில் ஒன்றாகவும் திகழும் பரிசுத்த பனிமய அன்னை திருத்தலப் பேராலயத்தின் 444-ஆம் ஆண்டு பெருவிழா, வரும் ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாகத் தொடங்குகிறது.
இதுகுறித்து பேராலய அதிபரும், பங்குத்தந்தையுமான அருட்திரு. ஜான் செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில்;
ஜூலை 26 (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் ஆண்டகை விழாக் கொடியினை ஏற்றிப் பெருவிழாவைத் தொடக்கி வைக்கிறார். நிகழ்வில் ஆயர்கள், குருக்கள், இறைமக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர்.
ஆகஸ்டு மாதம் 2ஆம் தேதி ஞாயிறு அன்று காலை தூத்துக்குடி ஆயர் மேதகு ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் குழந்தைகளுக்கான புதுநன்மைத் திருப்பலி நடைபெறவுள்ளது. அன்று மாலையில் நகர வீதிகளில் திரளான இறைமக்கள் பங்கேற்கும் திவ்விய நற்கருணைப் பவனியும் நடைபெறவுள்ளது.
04.08.2026, செவ்வாய்க்கிழமை அன்று மாலை தூத்துக்குடி ஆயர் மேதகு ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் மாலை ஆராதனையும், கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு நசரேன் சூசை மறையுரையும் நடைபெறவுள்ளது.
பெருவிழா கூட்டுத் திருப்பலி ஆகஸ்ட் 05ஆம் தேதி புதன்கிழமை மேதகு ஆயர் ஸ்டீபன் ஆண்டகை, உபகாரிகளுக்கானத் திருப்பலி மேனாள் ஆயர் இவோன் அம்புரோஸ் ஆண்டகை ஆகியோரால் சிறப்பிக்கப்படும்.
அன்னையின் பெருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பேராலய அதிபர், பங்குத்தந்தை அருட்பணி. ஜான் செல்வம், உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. ஜெரால்டு, களப்பணியாளர் சகோ. மைக்சன் மற்றும் அடைக்கல அன்னை, அமலவை அருட்சகோதரிகள். சவேரியானா இயேசு சபையினர், லசால் அருட்சகோதரர்கள், பேராலய மேய்ப்புப் பணிக்குழுவினர், பக்த சபையினர் மற்றும் இறைமக்கள் இணைந்து செய்து வருகின்றனர். மேலும் பேராலய பெருவிழாவிற்கு அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட அரசின் அனைத்து துறைகளும் சிறப்பாக செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஆலயத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். பனிமய அன்னையின் 444 வது ஆண்டுப் பெருவிழாவில் பங்கு பெற மக்கள் அனைவரையும் அழைக்கிறோம் என்று ஆலய அதிபர் அருட்திரு ஜான் செல்வம் கூறினார்.
நிகழ்வின்போது உதவி பங்கு தந்தை ஜெரால்டு, பேராலய பணிக்குழு துணை தலைவர் அண்டோ, செயலாளர் எட்வின் பாண்டியன், பொருளாளர் சோரிஸ், துணை செயலாளர் பெனாட் உடனிருந்தனர்.
