பாளை சிறையில் மார்கண்டேயன் எம்எல்ஏ’வுக்கு கனிமொழி எம்பி ஆறுதல்
பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ மார்கண்டேயனை, கனிமொழி எம்பி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வழக்கில் கைது செய்யப்பட்டு நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயனை, திமுக துணை பொதுச் செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேரில் சந்தித்துப் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் சர்ச்சைக்குரிய முறையில் பேசியது தொடர்பாகத் தூத்துக்குடி மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், நீதிமன்றக் காவலில் நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு இன்று நேரில் சென்ற கனிமொழி எம்பி, சிறையிலுள்ள எம்எல்ஏ மார்கண்டேயனைச் சந்தித்து உடல்நலம், வழக்கு விபரங்கள் குறித்துக் கேட்டறிந்தார். இச் சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, முன்னாள் சபாநாயகர் திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப், கோவில்பட்டி எம்எல்ஏ கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்பி கூறியதாவது: “சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் எம்எல்ஏ ஜிவி.மார்கண்டேயன் நலமாக இருக்கிறார். திமுகவினர் மீது எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அதைச் சட்டரீதியாக எதிர்கொள்ள கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் தயாராகவே உள்ளோம். இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு திமுகவினர் ஒருபோதும் அஞ்ச மாட்டார்கள்” என்றார்.
நிகழ்வின்போது தென்காசி தெற்கு மாவட்டம் ஜெயபாலன், முன்னாள் எம்எல்ஏ மாலை ராஜா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் உட்பட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
