செய்திகள்அண்மை செய்திகள்

திமுக எம்எல்ஏ. மார்கண்டேயன் ஜாமீன் மனு தள்ளுபடி

Share the news

விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு.

தூத்துக்குடி,
முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் ஜாமீன் மனு மற்றும் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய காவல்துறையின் மனு ஆகியவற்றை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஜி.வி. மார்கண்டேயன் எம்.எல்.ஏ’விடம் சுமார் 11 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பின்னர், தூத்துக்குடி 1-வது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுமதி முன்னிலையில் காவல்துறையினர் எம்எல்ஏ’வை ஆஜர்படுத்தினர். அவரை ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தரப்பில் ஜாமீன் கோரியும், காவல்துறையினர் சார்பில் 2 நாட்கள் காவல் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தன.

அரசு தரப்பில் வழக்கறிஞர் ஸ்ரீதேவியும், மார்கண்டேயன் எம்எல்ஏ தரப்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் காசிராஜனும் ஆஜராகி வாதாடினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுமதி, காவல்துறையின் காவல் மனு மற்றும் எம்எல்ஏ’வின் ஜாமீன் மனு ஆகிய இரண்டையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மார்கண்டேயன் எம்.எல்.ஏ. மீண்டும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஜாமீன் மனு விசாரணையைக் காண முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக ஒன்றிய செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர். அப்போது அங்கிருந்த திமுகவினரிடம் எம்எல்ஏ மார்கண்டேயன், கூறுகையில் “எத்தனை நாட்கள் சிறையில் இருக்கிறேனோ, அத்தனை நாட்களில் மீண்டும் ஆட்சி மாற்றம் வரும்” என்று கூறிய எம்எல்ஏ, திமுக பெண் தொண்டர்கள் என்னை பார்க்க அலைந்து சிரமப்பட வேண்டாம் வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன