செய்திகள்அண்மை செய்திகள்

ரயில்வே கேட் மூடல், மத்திய அமைச்சருக்கு தூத்துக்குடி பாஜக கடிதம்

Share the news

தூத்துக்குடி 2ஆம் ரயில்வே கேட் சிக்னல் சென்சார் காரணமாக அடிக்கடி மூடப்படுவதால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு, தீர்வு காண மத்திய அமைச்சருக்கு பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கடிதம்!

தூத்துக்குடி மேலூர் 2-வது ரயில்வே கேட் பகுதியில் சிக்னல் சென்சார் காரணமாக தேவையற்ற முறையில் 2 ம் கேட் அடிக்கடி மூடப்படுவதால் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு, பாராளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் எல்.முருகனுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாநகரின் முக்கிய போக்குவரத்து இணைப்பாக செயல்பட்டு வரும் 1-வது மற்றும் 2-வது ரயில்வே கேட்டை தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வணிகர்கள் மற்றும் அவசரகால வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. தற்போது தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் அல்லது நிலையத்துக்கு வரும் ரயில்கள் மற்றும் என்ஜின்கள் தடம் மாற்றும் பணிக்காக 1-வது ரயில்வே கேட்டை கடந்து மேலூர் பகுதியில் உள்ள எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி எல்லை வரை சென்று மீண்டும் பின்னோக்கி திரும்புகின்றன. ஆனால், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ‘ஆக்குபென்சி சென்சார்’ செயல்படுவதால், ரயில் 2-வது ரயில்வே கேட்டை அடையாத நிலையிலும் தானாகவே எச்சரிக்கை சிக்னல் செயல்பட்டு 2-வது ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதன் காரணமாக நாள்தோறும் பல முறை தேவையின்றி 2-வது ரயில்வே கேட் மூடப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி காலவிரயம் அடைவதுடன், பள்ளி மாணவர்கள், வணிகர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்களும் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றன.

எனவே, எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சிக்னல் சென்சாரை தொழில்நுட்ப ரீதியாக மாற்றி அமைத்து, 2-வது ரயில்வே கேட் மூடுவதற்கான சிக்னல் அமைப்பை தனித்தனியாகப் பிரிக்கும் நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அனுப்பியுள்ள மனுவில் வலியுறுத்தி உள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன