தூத்துக்குடியில் ஆக.15 முதல் தினசரி குடிநீர் மேயர் ஜெகன் தகவல்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதி முழுவதும் ஆகஸ்ட் 15 முதல் தினசரி குடிநீர் விநியோகம்! மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.
தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தினமும் குடிநீர் விநியோகிக்கப்படும்! அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தார் சாலை, பேவர் பிளாக் சாலை, மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், கூடங்கள், நூலகங்கள், உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் எஃப்சிஐ கூடோன் முதல் திரேஸ்புரம் கடற்கரை வரை செல்லும் பக்கிள் ஓடை விரிவாக்கம் செய்யும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி தபால் தந்தி காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மேயர் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சிக்கு தினமும் 79 மில்லியன் லிட்டர் தண்ணீர் வல்லநாட்டில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இந்த தண்ணீர் 36 மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் ஒரு லட்சம் குடிநீர் இணைப்புகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் 24 மணி நேரமும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீர் வீணாவதைத் தடுப்பதற்காக, ஒப்பந்தப்படி தினமும் ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் மாநகராட்சியில் 41 வார்டுகளில் தினமும், 17 வார்டுகளில் ஒருநாள் விட்டு ஒருநாளும், 2 வார்டுகளில் இருநாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 79வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் முதல் மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் தினசரி குடிநீர் விநியோகம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி கூறியுள்ளார்.
ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர் இசக்கி ராஜா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜா, போல்பேட்டை பகுதி ஜேஸ்பர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
