எம்எல்ஏக்கள் கைது நடவடிக்கையை கைவிட காயல் அப்பாஸ் வலியுறுத்தல்.
சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான கைது நடவடிக்கைகளை கைவிட வேண்டும். மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல்.
தூத்துக்குடி,
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்:
பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்ந்து கைது செய்து சிறைப்படுத்துவது, மக்களிடையே அரசுக்கு எதிரான வெறுப்பையே உண்டாக்கும்.
அரசு கொண்டு வரும் நலத்திட்டங்களை மக்களிடம் சேர்ப்பது மற்றும் தொகுதியின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது சட்டமன்ற உறுப்பினர்களின் முக்கியப் பணியாகும். அவர்களைக் கைது செய்வதன் மூலம் அந்தத் தொகுதிகளில் மக்கள் நலப் பணிகள் அனைத்தும் முற்றிலும் ஸ்தம்பித்துவிடும். இதனால் அல்ல்ல்படுவது பொதுமக்கள் மட்டுமே என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகள் மீது தொடரப்படும் வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகள் தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பாமர மக்களின் நிலை என்ன என்ற கேள்வியும் எழுகிறது.
அவதூறாகப் பேசும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சட்ட ரீதியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், கைது நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே அவர்களை ஒடுக்கிவிட முடியுமா?
எனவே, சட்டமன்ற உறுப்பினர்களைக் கைது செய்து சிறைப்படுத்தும் போக்கை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு காயல் அப்பாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
