தூத்துக்குடியில் பாஜக’வினருக்கு 2நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது
பாஜக நிர்வாகிகளுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் தூத்துக்குடி பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
பங்கேற்றார்.
தூத்துக்குடியில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் இரண்டு நாள் பயிற்சி முகாம் நிறைவு. தமிழக பாஜக சார்பில் கட்சியின் நிர்வாகிகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையிலும், கட்சியின் கொள்கைகள், அமைப்புச் செயல்பாடுகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கும் வகையிலும், மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம், செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
முகாமின் முதல் நாள் நிகழ்ச்சிகள் பல்வேறு விவாதங்களுடன் தொடங்கின, கட்சியின் வரலாறும் வளர்ச்சியும்: தலைப்பில் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
கட்சியின் கொள்கைகள் குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
‘தேசத்தின் முன் உள்ள சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளில் நமது முயற்சிகள்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் நாட்டின் வளர்ச்சி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நிர்வாகிகளுடன் கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
இரண்டாம் நாள் பயிற்சி முகாம் ஆரோக்கியம் மற்றும் அமைப்பு ரீதியான பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்தது. நிர்வாகிகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு காலை யோகா மற்றும் உடற்பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
கட்சியின் அடிப்படை அமைப்பான பூத் மேலாண்மை, நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் மற்றும் அமைப்பு ரீதியான செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மத்திய அரசு நலத்திட்டங்கள்: மத்திய அரசின் ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களின் முக்கியத்துவம் குறித்தும், அவற்றை கட்சிப் பணிகளில் திறம்படப் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த பயிற்சி முகாமின் பொறுப்பாளர்களாக மாநில பொதுக்குழு உறுப்பினர் திருநாகரன் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள், மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு அணி மற்றும் பிரிவுகளின் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
