அமைச்சர் நிதின் கட்கரியுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு, NH 32 விரிவாக்கம் விவசாயிகள் கவலை குறித்து பேச்சு
தேசிய நெடுஞ்சாலை 32 (NH 32) திட்டத்தால், தூத்துக்குடி மூலக்கரை மற்றும் அப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள கவலைகள் குறித்து அமைச்சரிடம் எடுத்துரைத்த கனிமொழி எம்பி
தூத்துக்குடி,
டெல்லியில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்பி நேரில் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து கனிமொழி கருணாநிதி எம்பி தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
”டெல்லியில் ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களைச் சந்தித்தேன். அச்சந்திப்பின் போது, முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது:”
விவசாயிகளின் கவலைகள்:
தேசிய நெடுஞ்சாலை 32 (NH 32) திட்டத்தால், தூத்துக்குடி மூலக்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள கவலைகள் குறித்து அமைச்சரிடம் எடுத்துரைத்தேன்.
என்.எச்-32 சாலையின் புதிய வழித்தட அமைப்பால், அப்பகுதியில் உள்ள விவசாயம் மற்றும் நீர்ப்பாசன முறைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அனுபவம் வாய்ந்த பொறியாளர்களைப் பாதிக்கும் வகையிலான ‘5 ஆண்டு பணி ஒப்பந்த வரம்பு’ குறித்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப் பொறியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ள கவலைகளை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவரை கேட்டுக் கொண்டேன் என கனிமொழி கருணாநிதி எம்பி பதிவிட்டுள்ளார்.
