இளைஞர்களை தவறாக வழி நடத்தும் முதல்வர் விஜய் திவிக கண்டனம்!
தமிழ்நாட்டு இளைஞர்கள் மாணவர்களை தற்குறிகளாக மாற்றும் வேலையை ஜோசப் விஜய் அரசு செய்துவருகிறது – திராவிடர் விடுதலைக் கழகம் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் கண்டனம்.
சென்னை:
நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்துப் போராடும் மாணவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை ஏவி விடுவதாகத் திராவிடர் விடுதலைக் கழகம் (திவிக) குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து திவிக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
இந்தியா முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகளால் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் கல்வி உரிமைக்காகப் போராடி வரும் மாணவர்கள் மீது டெல்லியிலும் சென்னையிலும் காவல்துறையினர் தடியடி நடத்தி ஒடுக்குமுறையைக் கையாண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறினாலும், போராடும் மாணவர்களைக் காவல்துறையைக் கொண்டு ஒடுக்கி வருகிறார். கல்வி நிலையங்களுக்குள்ளேயே புகுந்து மாணவர்களைக் கைது செய்ய முயல்வது கண்டிக்கத்தக்கது.
மாணவர்களின் இந்தப் போராட்டத்தைத் திசைதிருப்பும் வகையில், முதலமைச்சர் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் கொண்டாடுமாறு அமைச்சர்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்படுகிறது. நீட் ஒழிப்பு மற்றும் கல்வி உரிமைகளுக்காகப் போராடிய தமிழ்நாட்டின் இளைஞர்களை, திரையரங்குகள் முன் கொண்டாட்டங்களில் ஈடுபட வைத்துத் தற்குறிகளாக மாற்றும் வேலையை இந்த அரசு செய்து வருகிறது.
முந்தைய அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்வதையே பணியாகக் கொண்டுள்ள இந்த அரசு, மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்குச் செவிசாய்க்க வேண்டும் எனத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
