கப்பல் கட்டும் தளத்திற்கு எதிர்ப்பு: உப்புத் தொழிலாளர் வாழ்வாதாரம் காக்க தமமுக வலியுறுத்தல்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத்திற்கு எதிர்ப்பு: உப்புத் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் வழக்கு திரும்பப்பெற தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தல்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு, முத்தையாபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக சுமார் 1,800 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இதனால், 90 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக உப்புத் தொழில் செய்து வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாக நிற்கும் சூழல் உருவாகியுள்ளது.
இது தொடர்பாக, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் லாரன்ஸ் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்;
கப்பல் கட்டும் தளம் திட்டத்திற்கு எதிராகக் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி முள்ளக்காடு பகுதியில் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 25 பேர் மீது காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
கப்பல் கட்டும் தளத் திட்டத்தைக் கைவிட வேண்டும்: முள்ளக்காடு முதல் ஆறுமுகநேரி வரையிலான பகுதிகளில் விளைவிக்கப்படும் உயர் ரக உப்பு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்பகுதியின் முதன்மைத் தொழிலான உப்பு உற்பத்தியைப் பாதுகாக்கவும், பிற மாநிலத்தவரின் ஆதிக்கம் உருவாவதைத் தடுக்கவும் கப்பல் கட்டும் தளத் திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
பாதிப்புக்குள்ளாகும் உப்புத் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் தமிழக அரசு நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, சமூக உடன்பாடு காண வேண்டும். காந்திய வழியில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்திற்குத் தமிழகம் முழுவதிலும் உள்ள சமூக செயல்பாட்டாளர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
அரசு இக்கோரிக்கைகள் மீது கவனம் செலுத்தி இத்திட்டத்தைக் கைவிடவில்லையெனில், தூத்துக்குடியில் உள்ள ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தையும் திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டம் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க உப்புத் தொழிலைக் காப்பாற்றவும், தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களின் பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையிலும் தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
