சனி கிழமை முதல் சீரான குடிநீர்- மேயர் ஜெகன்
வல்லநாடு நீரேற்று நிலையத்தில்
மின்வெட்டு மற்றும் பழுது காரணமாக பாதிப்பு, தூத்துக்குடி மாநகரில் சனிக்கிழமை முதல் தடையின்றி குடிநீர் விநியோகம் – மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் நடைபெற்று வரும் குடிநீர், வடிகால் மற்றும் அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர், அலுவலர்கள் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
தற்போது குடிநீர் விநியோகம் குறித்து செய்தியாளர்களிடம் மேயர் கூறுகையில்; வல்லநாடு தலைமை நீரேற்று நிலையத்தில் கடந்த 10 நாட்களாக ஏற்பட்ட கடுமையான மின்வெட்டு, மின் கம்பிகள் பழுது காரணமாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் போதிய அளவு தண்ணீர் சேமிக்க முடியாமல், பல வார்டுகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதற்கு மாற்று மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், வரும் சனிக்கிழமை முதல் மாநகராட்சி முழுவதும் உள்ள 39 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் தடையின்றி சீரான குடிநீர் விநியோகம் நடைபெறும் என்று உறுதியளித்தார்.
மேலும், 40 ஆண்டுகள் பழமையான இரும்புக் குடிநீர் குழாய்கள் மாற்றப்பட்டு புதிய குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள வளர்ச்சிப் பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது கவுன்சிலர்கள் கனகராஜ், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், தெய்வேந்திரன், முத்துவேல், முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், செல்வக்குமார், மாாியப்பன், ராஜாமணி, திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன், திமுக மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் செல்வின், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், மாணவரணி துணை அமைப்பாளர் கார்த்தீசன், காங்கிரஸ் மண்டலத் தலைவர் சேகர், மின்வாரிய தொமுச தலைவர் பேச்சிமுத்து போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், ஜேஸ்பர், உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
