பேருந்து நிலையத்தில் புதிய கிணறு. மேயர் ஜெகன் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில், பயணிகள் பயன்பாட்டிற்கு புதிய கிணறு. மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய கிணறு அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார்.
இந்த புதிய கிணற்றில் தானியங்கி நீர் மோட்டார் மற்றும் தேவையான உபகரணங்கள் பொருத்தப்பட்டு, பேருந்து நிலையத்தில் உள்ள சுகாதார வளாகங்களுக்கு எந்த நேரத்திலும் தடையின்றி தண்ணீர் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:
“தூத்துக்குடி மாநகரில் மக்கள் தொகையும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் ஆயிரக்கணக்கான பயணிகள் அண்ணா பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
அவர்களின் வசதிக்காக நவீன கழிப்பிட வசதிகள், அதே கட்டிடத்தில் நூலகம், பாதுகாப்பிற்காக புறக்காவல் நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது குடிநீர் மற்றும் சுகாதார வளாகங்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் நோக்கில் புதிய கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதியின் மூலம் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல், 24 மணி நேரமும் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும். இதுபோன்று பொதுமக்கள் மற்றும் எதிர்கால தலைமுறையினரின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை மாநகராட்சி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் இந்த வசதிகளை முறையாக பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும் என மேயர் கூறினார்.
உடன் உதவி செயற்பொறியாளர், திமுக பகுதி செயலாளா்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர் உள்பட பலர் உடனிருந்தனர்.
