தூ-டி மாநகராட்சியில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பாஜக வரவேற்பு
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையை பா ஜ.க தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, அரசுத் துறைகளில் நிலவும் நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் ஊழல் குறித்த மக்களின் சந்தேகங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
குறிப்பாக, கைப்பற்றப்பட்ட தொகையில் தூத்துக்குடி மாநகராட்சி முதலிடத்தில் இடம்பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் எந்தவொரு நிர்வாக சேவையையும் பெறச் சென்றாலும், லஞ்சம் கொடுக்காமல் பணிகள் நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக இருந்து வருகின்றன.
மேலும், தூத்துக்குடி மாநகராட்சியில் நிலவி வரும் பல்வேறு டெண்டர் முறைகேடுகளை பாரதிய ஜனதா கட்சி சார்பாக கண்டித்து உயர் நீதிமன்றம் மூலமாக வழக்குகள் தொடுத்தும் மீண்டும் அதே நிலை தொடர்ந்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது . மக்களை அலைக்கழிக்கும் நிர்வாக அலட்சியம், அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் மற்றும் பல்வேறு சீர்கேடுகள் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்த சூழலில், லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்டுள்ள சோதனை மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இதன் மூலம் தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வந்ததாகக் கூறப்படும் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் பொதுமக்களின் கவனத்திற்கு வந்துள்ளன.
இதேபோல் மாநகராட்சி, நகராட்சி மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து திடீர் சோதனைகளை நடத்த வேண்டும். ஊழலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
வெளிப்படையான, ஊழலற்ற மற்றும் பொறுப்புமிக்க நிர்வாகத்தை உருவாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.
