செய்திகள்அண்மை செய்திகள்

தினசரி குடிநீர், வெள்ள அபாயம் நீங்க சிறப்பான வடிகால் கட்டமைப்புகள். மேயர் ஜெகன் பேச்சு

Share the news

தூத்துக்குடிக்கு தேவையான குடிநீர், வடிகால், சாலை மற்றும் சுகாதார கட்டமைப்புகளை வரும் காலத்திற்கு ஏற்றவாறு உருவாக்கி உள்ளோம் – மாமன்ற கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி

தூத்துக்குடி மாநகராட்சியில் மழைநீர் வடிகால், தடையற்ற குடிநீர் விநியோகம், சுகாதாரப் பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
​தூத்துக்குடி மாநகராட்சியின் மாதாந்திர சாதாரணக் கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்:
​தடையற்ற குடிநீர் விநியோகம்
​”கடந்த அதிமுக ஆட்சியில் 7 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டது. நாங்கள் பொறுப்பேற்ற பிறகு 2 நாட்களுக்கு ஒருமுறை என குடிநீர் வழங்கப்பட்டு, தற்போது தினமும் தடையின்றி குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றுப்படுகையில் நீர் இல்லாத சூழலிலும், 5 கி.மீ தூரம் வரை தோண்டி தண்ணீர் எடுக்கப்பட்டு, நகரில் உள்ள 36 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் மக்களுக்குத் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கோடைக் காலத்திலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நிலையான நீர் ஆதாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

வெள்ளத் தடுப்பு மற்றும் பக்கிள் ஓடை சீரமைப்பு
​நகரின் மையப்பகுதியில் உள்ள பக்கிள் ஓடை 7.5 கி.மீ நீளத்திற்கு அகலப்படுத்தப்பட்டு, 6 மீட்டர் ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் மழைக்காலங்களில் வினாடிக்கு சுமார் 2 லட்சம் கன அடி உபரிநீரை கடலுக்கு வெளியேற்ற முடியும். ஆங்கிலேயர் காலத்தைப் போல பக்கிள் ஓடையில் சுத்தமான மழைநீர் மட்டுமே செல்லும் வகையில் சுகாதாரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

காட்டாற்று வெள்ளப் பாதுகாப்பு
​நகருக்கு வெளிப்பகுதிகளில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளம் நகருக்குள் புகாதவாறு புதூர் பாண்டியாபுரம், மேட்டுப்பட்டி (வார்டு 7), திருச்செந்தூர் சாலை (வார்டு 49), பைபாஸ் மீன்வளக் கல்லூரி பகுதி, திரு.வி.க நகர் (வார்டு 51), பெல் ஹோட்டல் பின்புறம், உப்பாத்து ஓடை மற்றும் முள்ளக்காடு கால்வாய் உட்பட 13-க்கும் மேற்பட்ட நீர்வழித் தடங்கள் மற்றும் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது 30, 34 மற்றும் 48, 49​ உள்ளிட்ட சில வார்டுகளில் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இப்படி மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்
50ஆண்டுகளுக்கு தூத்துக்குடியில் மழைநீர் தேங்காத வகையிலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையிலும் சாலை மற்றும் சுகாதார உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டமைப்புகளை வரும் காலங்களில் முறையாகப் பராமரித்தாலே போதும்.

​அச்சுறுத்தல்களுக்கு சட்டப்படி நடவடிக்கை
அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சிலர் மிரட்டல் விடுத்து வருவதாகக் குறிப்பிட்ட மேயர், இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் சட்டரீதியாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எச்சரித்தார்.
​இக்கூட்டத்தில், வார்டு பகுதிகளில் நிறைவேற்றப்பட்ட பணிகளுக்கு நன்றி தெரிவித்தும், கனகராஜ், ராமகிருஷ்ணன், ரெக்ஸ்லின், சுரேஷ்குமார், கந்தசாமி, சரவணக்குமார், வைதேகி, ராஜதுரை, ஜெயசீலி, சந்திரபோஸ், மும்தாஜ் உள்ளிட்டோர் பேசினர். அதிமுகவில் இருந்து விலகிய கவுன்சிலர் மந்திர மூர்த்தி, திமுகவில் இருந்து விலகிய ராமர் ஆகியோர் வழக்கம்போல் மாமன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இக் கூட்டத்தில் 9 சாதாரணத் தீர்மானங்களும், 1 சிறப்புத் தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இதில் மண்டலத் தலைவர்கள் பாலகுருசாமி, அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாமன்ற உறுப்பினர்கள், உதவி ஆணையர்கள், பொறியாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன