செய்திகள்அண்மை செய்திகள்

கைம்பெண்களுக்கு வீடு வேலை உரிமைத் தொகை உயர்வு: தூத்துக்குடி கூட்டத்தில் வலியுறுத்தல்

Share the news

தூத்துக்குடி மாவட்ட கைம்பெண்கள் நல்வாழ்வு சங்கத்தின் பொதுக்கூட்டம் மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான சங்கத்தில் வைத்து நடைபெற்றது.

தூத்துக்குடியில் கைம்பெண்கள் நல்வாழ்வு சங்க கூட்டம் மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமானம் சங்கத்தில் வைத்து நடைபெற்றது. நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட விதவைகள் நல்வாழ்வு சங்க தலைவர் சரண்யா ராஜ்குமார் தலைமை தாங்கினார். தூத்துக்குடி ஓய்வூதியர் நலச் சங்கம் தலைவர் மாடசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஏஐசிசிடியு தேசிய குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட தலைவர் மின்னல் அம்ஜத் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பெண்களின் நலன், வாழ்வாதார உயர்வு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி பல்வேறு முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
​இக்கூட்டத்தில் சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விடுக்கப்பட்டுள்ள
​முக்கியத் தீர்மானங்கள் மற்றும் கோரிக்கைகள்:
தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட மகளிருக்கான உரிமைத் தொகையை ரூ. 2,500-ஆக உயர்த்தியும், ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கவும் தமிழக முதலமைச்சர் உடனடியாக ஆவன செய்ய வேண்டும்.

தூத்துக்குடி கோரம்பள்ளம் ஐயனடப்பு கிராமம் மற்றும் சண்முகபுரம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள வீடுகளை, முன்னுரிமை அடிப்படையில் ஏழைப் பெண்களுக்கும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் இலவசமாக வழங்கிட வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கிட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உரிய உத்தரவிட வேண்டும்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சுயமரியாதையுடன் குடும்பம் நடத்திட ஏதுவாக, சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி உரிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு வேலைவாய்ப்பு அலுவலரை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தூத்துக்குடியில் இயங்கி வரும் துறைமுகப் பகுதிகளில் உள்ள அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கிட துறைமுகத் தலைவர் (Chairman) அவர்கள் உத்தரவிட வேண்டும்.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகங்களில் காலியாக உள்ள மற்றும் புதிய பணியிடங்களில், தகுதியான கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கிட மாநகராட்சி மேயர் ஆவன செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில், குறிப்பாய் தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்கள் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக நடமாட ஏதுவாக தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள பெண்குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநில காவல்துறை உரிய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்று ​பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இக்கூட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன