தூத்துக்குடி கேவிஎஸ் பள்ளியின் 39வது ஆண்டு விளையாட்டு விழா
தூத்துக்குடி கேவிஎஸ் மேல்நிலைப் பள்ளியின் 39 வது ஆண்டு விளையாட்டு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
தூத்துக்குடி கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் 39-வது ஆண்டு விளையாட்டு விழா, புனித மரியன்னை மகளிர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைவர் கே.எஸ்.எஸ்.ஏ. திராவிடமணி தலைமை தாங்கினார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டன. தலைமை ஆசிரியை மெலிண்டா சூசன் தாமஸ் வரவேற்புரையாற்றி, கடந்த ஆண்டின் விளையாட்டுப் போட்டிகள் குறித்த ஆண்டறிக்கையை வாசித்தார். வ.உ.சி. துறைமுக விளையாட்டுக் கழகச் செயலாளர் செயலாளர் எம்.ஆர். தமிழ்செல்வன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சமாதானப் புறாக்களைப் பறக்கவிட்டு, மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இவ்விளையாட்டுப் போட்டியில் மாணவ மாணவிகள் நான்கு அணிகளாகப் பிரிக்கப்பட்டு ஓட்டப்பந்தயம், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட 14 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் அதிக அளவிலான தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி, மொத்தம் 105 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த அணிக்குக் கே.வி.எஸ். பள்ளிச் சுழற்கேடயம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிக்குச் சுழற்கேடயத்தைப் பள்ளித் தலைவர் கே.எஸ்.எஸ்.ஏ. திராவிட மணி, செயலாளர் டி.ஆர்.தமிழரசு, பொருளாளர் டி.ஆர்.பாலமுருகன் மற்றும் புனித மரியன்னை மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் ஷிபானா ஆகியோர் வழங்கினர். மேலும், தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்குத் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாணவ மாணவிகளின் கண்ணைக் கவரும் வண்ணமயமான நடனம், நாட்டியம், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளும், தற்காப்பு கலைக் காட்சிகளும் இடம்பெற்றன. விழா முடிவில் பள்ளித் துணைத் தலைமை ஆசிரியை கிறிஸ்டோமெல் மேத்தா நன்றி கூறினார். பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
