செய்திகள்அண்மை செய்திகள்

கிடப்பில் வளர்ச்சி திட்டங்கள் அமைச்சர் ஸ்ரீநாத் நடவடிக்கை எடுக்க பிஜேபி வலியுறுத்தல்

Share the news

கிடப்பில் போடப்பட்ட தூத்துக்குடி வளர்ச்சித் திட்டங்கள், கோரிக்கைகள் மீது அமைச்சர் ஸ்ரீநாத் நடவடிக்கை எடுக்க பிஜேபி வணிகர் பிரிவு வலியுறுத்தல்.

தூத்துக்குடி மக்களின் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் கானல் நீராகவே உள்ளது அதனை புதியதாக பொறுப்பேற்று இருக்கும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் நிறைவேற்றுவாரா? என்று பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வணிகர் பிரிவு தலைவர் செந்தில் குமார் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
தூத்துக்குடி நகரின் நீண்டநாள் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி பிஜேபி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்து வந்துள்ளார். அதன்படி, தூத்துக்குடி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அனைத்து நோயாளிகளும் முழுமையாக பயன்பெறும் வகையில் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.
மேலும், அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதர்கள் வளர்ந்து பாம்புகள் நடமாடுவதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர் என்றும், உடனடியாக புதர்களை அகற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல், சிவ அரசு பள்ளி வளாகத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதால், நிரந்தர தீர்வு காண வேண்டும். மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்திடம் பல மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தாலும், நடவடிக்கையின்றி கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

தற்போது தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று புதிய மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீநாத், மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக விவிடி சிக்னல் பகுதியில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் விரைந்து மேம்பாலம் அமைப்பது.
அதேபோல் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க முக்கிய சாலைகள் மற்றும் பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
தூத்துக்குடி நகரின் மையத்தில் செயல்பட்டு வரும் பேருந்து நிலையம் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வாக புறநகர் பகுதியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.
நகரில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

மேலும் மழைக்காலங்களில் நீர் தேக்கம், பாதாள சாக்கடை பணிகளில் உள்ள குறைபாடுகள், சேதமடைந்த சாலைகள், தெருவிளக்கு வசதி சீர் செய்யவும், துறைமுகப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானங்களை நவீனப் படுத்த வேண்டும். நமது மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் வகையில் கடல்சார் தொழில், உணவு பதப்படுத்தும் தொழில், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள், ஐ.டி. மற்றும் சிறு தொழில் பூங்காக்கள் புதிதாக உருவாக்கப்பட வேண்டும்.
இதில் இப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். அவர்களின் திறனை மேம்படுத்த தொழில்பயிற்சி மையங்கள் உருவாக்க வேண்டும். இது குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் மக்களுக்கான திட்டங்களை உடனடியாக செயல்படுத்தி தூத்துக்குடி வளர்ச்சிக்கான புதிய மாற்றத்தை உருவாக்குவாரா என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என பிஜேபி மாவட்ட வணிகர் பிரிவு தலைவர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன