செய்திகள்அண்மை செய்திகள்

வேடநத்தம் மாணவி கொலை குற்றவாளிக்கு இரட்டை தூக்கு நீதிபதி தீர்ப்பு

Share the news

வேடநத்தம் ப்ளஸ் டூ மாணவி கொலை குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை நீதிபதி அதிரடி தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்புப் பள்ளி மாணவி, கடந்த மார்ச் மாதம் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், விவாதங்களையும் ஏற்படுத்தியது.

இவ்வழக்கில் தீவிரப் புலனாய்வு மேற்கொண்ட மாவட்டக் காவல் துறையினர், தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற முக்கியக் குற்றவாளியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். காவல் துறையினரின் விசாரணையில், குற்றவாளி தர்ம முனீஸ்வரன் ஏற்கனவே ஒரு மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையிலிருந்தது தெரியவந்தது. அந்த வழக்கில் நீதிமன்ற ஜாமீனில் வெளியில் வந்திருந்த நிலையில்தான், மீண்டும் வேடநத்தம் பள்ளி மாணவியைக் குறிவைத்து இத்தகைய கொடூரக் குற்றச் சம்பவத்தில் தர்ம முனீஸ்வரன் ஈடுபட்டுள்ளார் என்பதைப் போலீஸார் ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிரூபித்தனர். இவ்வழக்கின் அனைத்துத் தரப்பு விசாரணைகளும், சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் சமர்ப்பிக்கும் பணிகளும் தூத்துக்குடி மாவட்டப் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் முழுமையாக நிறைவடைந்தன.

இதனைத் தொடர்ந்து மே 25 திங்கள் காலை நீதிமன்றம் கூடியவுடன், குற்றவாளி தர்ம முனீஸ்வரன் மீதான கொடூரக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, அவரைப் போக்சோ நீதிமன்ற நீதிபதி குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள தர்ம முனீஸ்வரனுக்கான இறுதித் தண்டனை தீர்ப்பு பிற்பகல் 1.00 மணிக்கு நீதிமன்றத்தில் நீதிபதி பிரீத்தா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். குற்றவாளி தர்மமுனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக எல்லம்மாள் கிஸிங்கர் சிறப்பாக வாதாடினார்.

தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த நபருக்குக் கடுமையான தண்டனை கிடைக்கப் போகிறது என்பதால் தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த தீர்ப்பு மகளிர் அமைப்பினர் சமூக செயல்பாட்டாளர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன