செய்திகள்அண்மை செய்திகள்

தூத்துக்குடி போலீஸ் விசாரணையில் வாலிபர் மரணம், உறவினர்கள் போராட்டம்

Share the news

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் தாக்குதலே மரணத்திற்கு காரணம் எனக் கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டு அமுதா நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் அருணாச்சலம் (24). இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு எஃப்.சி.ஐ குடோன் எதிரே சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை வைத்து விற்பனை செய்ததாக தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் தரண்யா தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.

காவல் நிலையத்தில் வைத்து விசாரணையில் இருந்தபோதே அருணாச்சலத்திற்கு திடீரென உடலநலக் குறைவு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

வாலிபர் அருணாச்சலம் உயிரிழந்த செய்தி பரவியதும், அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மருத்துவமனை மற்றும் காவல் நிலையப் பகுதியில் திரண்டனர். விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் நடத்திய கடுமையான தாக்குதலாலேயே அருணாச்சலம் உயிரிழந்துள்ளார். மேலும் அருணாசலம் மரணமடைவதற்கு முன் போலீஸ் தாக்குதல் குறித்து வீடியோ காட்சிகளில் தெளிவாக கூறியுள்ளதாகவும் இதற்குக் காரணமான தெற்கு காவல் நிலைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும், பரப்பரப்பான சூழலும் நிலவியது. சம்பவ இடத்திற்கு வந்த உயர் காவல் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மருத்துவமனை பகுதிக்கு வந்த முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், மரணமடைந்த இளைஞர் அருணாச்சலம் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். இது குறித்து கீதா ஜீவன் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள், திமுக பகுதி, செயலாளர்கள், மகளிரணியினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் உடனிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தென்பாகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன