செய்திகள்உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி முன்மாதிரியாக திகழ்கிறது, மேயர் ஜெகன் தகவல்

Share the news

தூத்துக்குடி மாநகராட்சியில் சாலை, குடிநீர், வடிகால், தெருவிளக்கு மற்றும் சுகாதாரம் போன்ற மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, முன்மாதிரி மாநகராட்சியாகத் திகழ்கிறது என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியின் மாதாந்திர சாதாரணக் கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
​கூட்டத்தைத் தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:
​”தூத்துக்குடி மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டதன் காரணமாக, புறநகர்ப் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் வேகமாகக் பெருகி வருகின்றன. குறிப்பாக, மாநகராட்சியின் 2 மற்றும் 3-வது வார்டுகளில் புதிதாக 3,000-க்கும் மேற்பட்ட வீடுகள் உருவாகியுள்ளன. இப்பகுதிகளில் இருந்து மாநகராட்சிக்கு வரவேண்டிய சொத்து வரி மற்றும் குடிநீர் வரி வருவாய் குறித்து ஆய்வு செய்யப்பட்டு முறைப்படுத்தப்படும்.
​கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் மாநகராட்சிப் பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒருமுறையும், பின்னர் 5 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. நாங்கள் பொறுப்பேற்ற பின் கட்டமைப்புகள் சீர்படுத்தப்பட்டு குடிநீர் வசதி பெருக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளுக்கும் 24 மணி நேரமும் தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும். பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
​மேலும், 12 கிலோமீட்டர் நீளமுள்ள பக்கிள் ஓடை தூர்வாரப்பட்டு அகலப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும். மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளம் நகருக்குள் புகாதவாறு தடுக்க 14 வழிகளில் நீர்வழிப் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
​நகரில் புதிதாக 1,850 தெருவிளக்குகள் அமைக்க ஒப்புதல் கோரப்பட்டுள்ளது; இவை விரைவில் பொருத்தப்படும். தெருவிளக்குகளில் ஏற்படும் பழுதுகளும் உடனுக்குடன் சீரமைக்கப்படும். மாமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய ரயில்வே கேட் பிரச்சனை தொடர்பாகச் சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து விரைவில் நல்ல தீர்வு காணப்படும், என மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.

​இக்கூட்டத்தில், முன்னாள் அதிமுக நிர்வாகியும் கவுன்சிலருமான மந்திரமூர்த்தி, தான் சேர்ந்துள்ள புதிய கட்சியின் அடிப்படையில் தனக்கு தனியிடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வெளிநடப்பு செய்தார்.
​இன்றையக் கூட்டத்தில் மொத்தம் 24 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
​இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல் ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன