அமைச்சர் நிர்மல்குமாருக்கு கீதாஜீவன் கண்டனம்
பொய்ச் செய்திகளை மட்டுமே பேசும் அமைச்சர் நிர்மல் குமாருக்கு முன்னாள் அமைச்சர் பி.கீதாஜீவன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்
தூத்துக்குடியில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் அமைச்சர் நிர்மல் குமார் பேச்சுக்கு, திமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்;
தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், அரசியல் நாகரிகமின்றி முன்னாள் முதலமைச்சர் கலைஞர், எனது தந்தையார் என். பெரியசாமி, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ மற்றும் என்னைப் பற்றி அவதூறான பொய்களைப் பேசியுள்ளார். அவரின் இந்தப் பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கடந்த காலங்களில் மழை வெள்ளப் பாதிப்பின்போது, தூத்துக்குடியில் யாருமே களத்திற்கு வரவில்லை என்று அவர் வாய்க்கூசாமல் பொய் கூறியிருக்கிறார்.
நான் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் என்ற முறையில், தூத்துக்குடியின் அனைத்து வீதிகளுக்கும் நேரடியாகச் சென்று சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டேன். அன்றைய துணை முதலமைச்சர், தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இது தூத்துக்குடி மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.
ஆனால், அந்தப் பேரிடர் காலத்தில் நீங்கள் எங்கே இருந்தீர்கள் என்று யாருக்குமே தெரியாது. கரூரில் பாதிக்கப்பட்ட மக்களைக் கூடத் திரும்பிப் பார்க்காமல் ஓடிய நீங்கள், இதைப் பற்றிப் பேசலாமா? டப்ளின்
தூத்துக்குடியில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் திமுகவினர் பணம் வசூல் செய்வதாக நிர்மல்குமார் பொய்யாகப் பேசியுள்ளார். திமுகவினர் யாரிடமும் அப்படி வசூல் செய்யவில்லை. உங்களால் அதை நிரூபிக்க முடியுமா? அப்படி நிரூபிக்கத் தவறினால், திமுகவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
”வாய் இருக்கிறது; அதிகாரம் இருக்கிறது” என்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற அகம்பாவத்தைக் கைவிடுங்கள். பல கட்சிகளுக்கு மாறிய பச்சோந்தியான நிர்மல்குமார், இனியாவது கண்ணியத்துடன் பேசப் பழக வேண்டும். என முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
