செய்திகள்அண்மை செய்திகள்

முதல்வர் விஜய்க்கு, பனை பாதுகாப்பு- தொழிலாளர் மேம்பாட்டு இயக்கம் பாராட்டு

Share the news

தமிழ்நாடு பனை மேம்பாட்டு கழகம்’ நிறுவப்படும் என அறிவித்துள்ள முதல்வர் ஜோசப் விஜய்க்கு, தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தலைவர் டாக்டர் கென்னடி நன்றி தெரிவித்து பாராட்டு.

தூத்துக்குடி:
தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குநருமான டாக்டர் எஸ்.ஜே. கென்னடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
​தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றி கழக அரசு, லஞ்சம் மற்றும் ஊழலற்ற சமூக நீதி அரசாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அரசின் 2026–2027ஆம் ஆண்டிற்கான முதல் பொது பட்ஜெட்டில், ₹16 கோடியில் ‘தமிழ்நாடு பனை மேம்பாட்டு கழகம்’ நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பதநீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பனைப் பொருட்கள் தயாரிப்பு ஊக்கப்படுத்தப்பட்டு, பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.
​தற்போதுள்ள பனை மரங்களில் 10 சதவீதத்திற்கும் குறைவானவையே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அரசின் இந்த அறிவிப்பால் இளைஞர்களும் பெண்களும் இத்தொழிலில் கூடுதலாக ஈர்க்கப்படுவர். இதனால் பனைப் பொருட்களின் உற்பத்தி அதிகரித்து, வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் அன்னிய செலவாணியும், தொழிலாளர்களுக்குக் கூடுதல் வருவாயும் கிடைக்கும்.

அதேபோல், வேளாண் தனி பட்ஜெட்டில் ‘பனை பாதுகாப்பு இயக்கத்திற்கு’ ₹2.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பனை மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படுவதோடு, பனை விதைகள் மற்றும் கன்றுகள் விநியோகம், பனை ஓலை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி, உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
​பனைத் தொழிலுக்குப் புத்துயிரளிக்கும் வகையில் மொத்தம் ₹18.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்குத் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவர் டாக்டர் எஸ்.ஜே. கென்னடி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன