ODOP திட்டம் தமிழக இளைஞர்களுக்கு திருப்புமுனை – பாஜக ஐடி விங் நிர்வாகி
மத்திய அரசின் ODOP திட்டம்: தமிழ் மாநிலத்தின் தொழில் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்கு புதிய திருப்புமுனையாக அமையும் பாஜக ஐடி விங் நிர்வாகி அன்னபூர்ணா பிள்ளை அறிக்கை
தூத்துக்குடி:
மத்திய அரசின் ‘ஒரு மாவட்டம்; ஒரு தயாரிப்பு’ (One District One Product – ODOP) திட்டத்தின் கீழ், தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கோவை, திருப்பூர், சேலம், மதுரை, தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது மாநிலத்தின் தொழில் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்கு புதிய திருப்புமுனையாக அமையும் என்று பாஜக ஊடகப்பிரிவு மாநில செயலாளர் அன்னபூர்ணா பிள்ளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு மாவட்டத்தின் பாரம்பரிய மற்றும் தனித்துவமான தயாரிப்புகளை உலகச் சந்தைக்குக் கொண்டு செல்வதுடன்; அப் பொருட்களுக்கு பிராண்டிங், தரச்சான்றிதழ், நவீன தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல், நிதி உதவி மற்றும் ஏற்றுமதி வசதிகளை வழங்குவதே ‘ODOP’ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தின் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) வலுப்பெறும். கைவினைஞர்கள், விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். மாவட்டத்தின் அடையாளமாகத் திகழும் பொருட்கள் சர்வதேச சந்தையில் அறிமுகமாகி ஏற்றுமதி கணிசமாக உயரும்.
முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதால், அங்குள்ள பல மாவட்டங்களின் பாரம்பரியப் பொருட்கள் சர்வதேசச் சந்தையை சென்றடைந்தன. இதனால் ஏற்றுமதி மதிப்பு உயர்ந்ததுடன், ஆயிரக்கணக்கான சிறு தொழில்கள் புத்துயிர் பெற்று லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாயின. இதன் வெற்றியே தற்போது இத்திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படக் காரணமாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 9 மாவட்டங்களும் ஏற்கனவே உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளவை. ODOP திட்டத்தின் முழுமையான ஆதரவு இவற்றுக்குக் கிடைப்பதன் மூலம் உலகளாவிய முதலீடுகள் அதிகரிக்கும்; புதிய தொழிற்சாலைகளும் துணைத் தொழில்களும் உருவாகும். இதன் மூலம் பல்லாயிரக் கணக்கானோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் மையமாகக் கொண்டு செயல்படும் மத்திய அரசின் இந்த முயற்சி, மாநிலத்தின் தொழில் துறைக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். எதிர்காலத்தில் தமிழகம் உலகளாவிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக உருவெடுக்க இத்திட்டம் பெரிதும் துணைநிற்கும் என்று அன்னபூர்ணா பிள்ளை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
