செய்திகள்அண்மை செய்திகள்

வரலாறு தெரியாத அமைச்சர் நிர்மல்குமார், மேயர் ஜெகன் பதிலடி

Share the news

தூத்துக்குடி தவெக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நிர்மல்குமார், மேயர் ஜெகன் பெரியசாமி குறித்து விமர்சித்துப் பேசியிருந்தார். அவரின் இந்தப் பேச்சுக்கு மேயர் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி:
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி குறித்து விமர்சித்துப் பேசியிருந்தார். “மழை வெள்ளத்தால் தூத்துக்குடி மக்கள் பாதிக்கப்பட்டபோது மேயர் சேலம் மாநாட்டுக்குச் சென்றுவிட்டார்; அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை” எனக் குற்றம் சாட்டி, வரும் உள்ளாட்சித் தேர்தலில் அவரைத் தோற்கடிக்குமாறு பேசினார்.

இதற்குத் தூத்துக்குடி மாநகராட்சி மேயரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி கடுமையான கண்டன அறிக்கையின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள்:
“தூத்துக்குடியில் எத்தனை தெருக்கள் உள்ளன என்று கூட தெரியாத அமைச்சர் நிர்மல்குமாருக்கு மாநகராட்சியைப் பற்றிப் பேசத் தகுதியில்லை. நூறாண்டுகளில் இல்லாத பெருவெள்ளம் ஏற்பட்டபோது, அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 15 நாட்களுக்கும் மேலாக தூத்துக்குடியிலேயே முகாமிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நேரடியாகக் களத்தில் இறங்கி, ஒரே மாதத்திற்குள் அனைத்துப் பாதிப்புகளையும் சரிசெய்தனர். அதிமுக ஆட்சியில் சாதாரண மழைக்கே மாதக்கணக்கில் நீர் தேங்கிய வரலாறு அமைச்சருக்குத் தெரியுமா?”

மாநகராட்சியின் சாதனைத் திட்டங்கள்:
“திராவிட மாடல் ஆட்சியில் தூத்துக்குடி மாநகராட்சியில் 4,000 சாலைகள், 3 மகளிர் பூங்காக்கள் உட்பட 53 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி படிப்பகம் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அரசு மற்றும் வங்கிப் பணிகளில் சேர்ந்துள்ளனர். மாநகராட்சிப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. மேலும், கோடைகாலத்தில் நிலவிய குடிநீர்ப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டு தற்போது 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.”
​மின்சாரத் துறைச் சிக்கல்கள் குறித்துக் கேள்வி:
“அமைச்சர் நிர்மல்குமார் தனது சொந்தத் துறையில் உள்ள குறைகளை முதலில் சரிசெய்ய வேண்டும். தூத்துக்குடி அனல் மின்நிலைய உற்பத்திப் பாதிப்பு, ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் மற்றும் சாம்பல் கழிவுகளால் கடல்வளம், உப்பளங்கள் பாதிக்கப்படுவது போன்ற பிரச்சனைகளில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.”

​’முரட்டு பக்தன்’ பட்டத்தின் பின்னணி:
“எனது தந்தை என்.பெரியசாமி சிறு வயது முதல் ஒரே கட்சியில் இருந்து உழைத்தவர். அவரது தியாகத்தைப் பாராட்டி முத்தமிழறிஞர் கலைஞரால் வழங்கப்பட்டதே ‘முரட்டு பக்தன்’ என்ற பட்டம். பல கட்சிகளுக்கு மாறி வந்த அமைச்சருக்கு இந்தக் கட்சியின் வரலாறும் பாரம்பரியமும் புரிய வாய்ப்பில்லை,” என்று மேயர் ஜெகன் பெரியசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன