சவாலான, தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். சுதந்திர தின விழாவில் மேயர் ஜெகன் பேச்சு
தூத்துக்குடி மாநகராட்சியில் 80 வது சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியேற்றிய மேயர் ஜெகன் பெரியசாமி; சவாலான திட்டங்களையும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக கூறினார்
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் 80வது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கும் அலுவலர்களுக்கும் இனிப்புகளை வழங்கினார். துணை ஆணையர் வெங்கட்ராமன் வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:
”கடந்த 2022 மார்ச் 4-ஆம் தேதி இந்த வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. மக்கள் மனதில் என்றும் முதல்வராக இருக்கும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வாய்ப்பை நமக்கு கொடுத்தார். தொடர்ந்து, அவர் ஆய்வுக்காக தூத்துக்குடியில் பல்வேறு இடங்களை நேரில் ஆய்வு செய்து இனி நகரில் மழை வெள்ள நீர் தேங்காத நிலையை உருவாக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். அவரது அறிவுரையின் பேரில், தீவிர கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சீரமைப்புப் பணிகள் திட்டமிட்டு முடிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, இனிவரும் மழைக்காலங்களில் மாநகரப் பகுதியில் மழைநீர் தேங்காத நிரந்தர சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கால்வாய்கள் அமைக்கப்பட்டு பெருமழை நீரும் நேரடியாக கடலில் கலக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் ‘எண்ட் டு எண்ட்’ (End-to-End) முறையில் போடப்பட்டதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு பெருமளவு குறைந்துள்ளது.
பூங்கா நிலங்கள் பாதுகாப்பும் , பராமரிப்பும்
ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்கப்பட்ட 206 பூங்கா இடங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மகளிர் சிறப்புப் பூங்காக்கள், செயற்கை புல்தரையுடன் கூடிய சிறிய விளையாட்டு மைதானங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
தருவைகுளம் உரக்கிடங்கு பகுதியில் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு அடர் வனம் உருவாக்கப்பட்டுள்ளது.
தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டம்
தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்தபோதும், வல்லநாடு நீரேற்று நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு தடையின்றி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது 28 வார்டுகளுக்கு தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், விரைவில் மாநகராட்சியின் அனைத்து வார்டுகளுக்கும் 24X7 (24 மணி நேரமும்) தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
அடுத்த 30 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் தேவைகளைக் கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுப் பணியாற்றி வருகிறது. பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்த்து, வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்து பசுமை மாநகராட்சியை உருவாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். என மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.
நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் மும்தாஜ், முத்துமாரி, ராமகிருஷ்ணன், ரெக்ஸ்லின், கனகராஜ், சந்திர போஸ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கோட்டு ராஜா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், மற்றும் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் விருதுகளை மேயர் மற்றும் ஆணையாளர் வழங்கி கௌரவித்தனர்.
விழாவில் துணை மேயர் செ.ஜெனிட்டா, மண்டல தலைவர்கள் நிர்மல் ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாநகர்நல அலுவலர் கணேஷ், உதவி ஆணையர்கள் முனீர் அகமது, காந்திமதி, மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார அலுவலர்கள் ஹரி கணேஷ், ராஜபாண்டி, ராஜசேகர். ஸ்டாலின் மற்றும் அனைத்து பணியாளர்கள் முன்னாள் மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
