உள்ளூர் செய்திகள்செய்திகள்

சிவன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஏப்ரல் 30ல் நடைபெறுகிறது

Share the news

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஏப்ரல் 30ல் நடைபெறுகிறது

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் (சிவன் கோவில்) ஆலய விழாக்களில் முக்கியமானது சித்திரை திருவிழா தேரோட்டம். நகரின் பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலய சித்திரை திருவிழா திருத் தேரோட்டம் ஏப்ரல் 30 தேதி வெகு சிறப்பாக நடைபெற உள்ளது இதனையடுத்து கோயில் நிர்வாகம், அறங்காவலர் குழு சார்பில் வேத பாராயணம், கிராமிய கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி சிவன் கோவிலில் அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரைப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் செயல் அலுவலர் தமிழ்செல்வி, பிரதான குருக்கள் செல்வம் பட்டர், சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஏ.சி.செந்தில்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயலெட்சுமி ஆகியோர் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் குறித்து பேசுகையில்;.

தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழா மிக சிறப்பு வாய்ந்ததாகும் ஏப்ரல் 21ஆம் தேதி காலை 10.40 மணி முதல் 11.10 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்ற விழாவுடன் சித்திரைப் பெருந்திருவிழா துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் மற்றும் வேத பாராயணம், கிராமிய கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத் தேரோட்டம் ஏப்ரல் 30ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெறுகிறது. அன்றைய தினம் பாண்டிச்சேரி, விருதாச்சலம், கரூர் பகுதிகளில் இருந்து வரும் சிவ தொண்டர்களின் வாத்தியங்கள், தேவார இன்னிசை, வேதபாராயணம் ஆகியவை ஒலிக்க, கோலாட்டம், மயில் ஆட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் தேர்பவனி சிறப்பாக நடைபெறும்.

சிறிய தேரில் ஸ்ரீ மகா கணபதி மற்றும் ஸ்ரீ முருகப்பெருமான் எழுந்தருள, பெரிய தேரில் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் ரதவீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருவிழாவில் நடைபெறும் சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பக்தர்கள் குடும்பத்துடன் பெருந்திரளாக கலந்து கொள்ளவேண்டும்.
நான்கு ரத வீதிகளிலும் தேர் தடையின்றி வலம் வரும் வகையில், சாலையில் உள்ள பள்ளங்களைச் சீரமைத்தல் மற்றும் தாழ்வான மின் கம்பிகளை சரிசெய்யும் பணிகள் மாநகராட்சி மற்றும் மின்வாரிய உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேரோட்டத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், ரத வீதிகளில் குடிநீர் வசதி, நிழற்பந்தல்கள் மற்றும் மருத்துவ, தீயணைப்பு மீட்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன