செய்திகள்அண்மை செய்திகள்

தூத்துக்குடி காங்கிரஸார் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

Share the news

தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அனைவரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் முரளிதரன் தலைமையில், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடிண்டா, தெற்கு மண்டல தலைவர் ராஜன், மீனவரணி மாவட்ட தலைவர் மிக்கேல், மாநகர செயலாளர் நாராயணசாமி, மண்டல தலைவி கமலா, முன்னாள் கவுன்சிலர் வெங்கட சுப்பிரமணியன், அமைப்பு சார மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி தேவி, விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவர்கள் சின்ன காளை, காசிராஜன், மற்றும் 27 வார்டு தலைவர்கள், மகளிர் அணி உள்பட 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் கலைஞர் அரங்கில் திமுக மாவட்ட செயலாளர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்து தொிவித்த மாவட்ட செயலாளர் கீதாஜீவன் கூறுகையில்;
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உண்மையாக உழைத்த நீங்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியின் துரோகத்தை, சந்தர்ப்பவாத அரசியலை எதிர்த்து திமுகவில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். உங்கள் பகுதியில் திமுக கட்சிக்கு வலுசேர்க்கும் வகையிலும், மக்களுக்கான நலப்பணிகளையும் சிறப்பான முறையில் மேற்க்கொள்ள வேண்டும். உங்கள் உழைப்பிற்கு உரிய மரியாதை நிச்சயம் கிடைக்கும் என்றார்
.

முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் முரளிதரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்;
அகில இந்திய காங்கிரஸ் தலைமை தடம் மாறி காங்கிரஸின் சித்தாந்தங்களில் இருந்து விலகி சந்தர்ப்பவாத அரசியலில் கரைந்து விட்டது. 14 ஆண்டுகளாக திமுக வுடன் இந்தியா கூட்டணியில் செயலாற்றி வந்திருக்கிறோம். 2 நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்து திமுக உதவியுடன் 100 சதவீத வெற்றியை பெற்ற நிலையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சிக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்ற நிலையில், 2 அமைச்சர் பதவிகளுக்கு ஆசைப்பட்டு நம்பிக்கைக்குரிய கூட்டணி கட்சியான திமுக முதுகில் குத்தி விட்டு அவசர அவசரமாக ஆளும் தவெக உடன் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்திருக்கிறது. கேரளாவிலே வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தவெக தலைவர் முதல்வர் விஜயை காங்கிரஸ் மேலிடம் அழைத்த போதிலும் கூட, ஒன்றிய பாஜக அரசின் அழுத்தம் காரணமாக நிகழ்ச்சியை புறக்கணித்தது மட்டுமல்லாமல் கேரளாவின் புதிய காங்கிரஸ் அரசுக்கு இதுவரை வாழ்த்து செய்தி கூட சொல்ல தயங்கும் முதல்வர் விஜய்யை நம்பி இந்த சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை உண்மையான காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என முரளிதரன் பேசினார்
.

நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், மாநில பெறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், ஜெயக்குமார் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் நாகேஸ்வரி, கந்தசாமி, வட்ட செயலாளர் சுரேஷ், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், பொறியாளர் அணி தலைவர் பழனி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பிரபு, தொகுதி ஒருங்கிணைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஐ.ரவி, பிரதிநிதி பாஸ்கர் மற்றும் அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன