நாலுமாவடி புதுவாழ்வு மருத்துவமனையில் பிறந்த 500வது குழந்தைக்கு மோகன் சி லாசரஸ் பரிசு வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் உள்ள புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் பிறந்த 500-வது குழந்தைக்கு, இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் நினைவு பரிசு வழங்கிக் ஆசிர்வதித்தார்.
நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் தொடங்கப்பட்ட புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை, கடந்த 2022 ஜூலை 7 முதல் பொதுமக்களுக்கு மருத்துவச் சேவை வழங்கியும், கிராமங்களில் மருத்துவ முகாம்களையும் நடத்தி வருகிறது. குறைந்த கட்டணத்தில் சிறந்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் திருச்செந்தூர், உடன்குடி , திசையன்விளை, ஏரல், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், செய்துங்கநல்லூர், ஆழ்வார்திருநகரி, கும்ருபூர் மற்றும் ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான கிராம மக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இங்கு மகப்பேறு சிகிச்சைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், சாத்தான்குளத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி – ரம்யா தம்பதியினருக்குப் பெண் குழந்தை பிறந்தது. இது இந்த மருத்துவமனையில் பிறந்த 500-வது குழந்தை என்பதால், அதனைக் கொண்டாடும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ், குழந்தைக்குத் தங்க மோதிரம் மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கி ஆசிர்வதித்தார். முன்னதாக புதுவாழ்வு சங்க அறங்காவலரும், பன்னோக்கு மிஷன் மருத்துவமனை இயக்குனருமான அன்புராஜன் வரவேற்றார். மகப்பேறு மருத்துவர் ஜெயசுதா வாழ்த்திப் பேசினார்.
இந்நிகழ்வில் இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறங்காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் இயேசு விடுவிக்கிறார் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊழிய பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
