அண்மை செய்திகள்செய்திகள்

வீரபாண்டிய கட்டபொம்மன் விழா, அரசு சார்பில் கலெக்டர், எஸ்பி மரியாதை செலுத்தினர்

Share the news

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகா பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு இன்று (08.05.2026), மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.சி.மதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

“மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் வீரவரலாறு”
பாஞ்சாலங்குறிச்சியில் ஜெகவீர கட்டபொம்மன் மற்றும் ஆறுமுகத்தம்மாள் தம்பதியருக்கு மகனாக 1760ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தார். கட்டபொம்மன் வீரசக்கம்மாள் என்பவரை மணமுடித்தார். கட்டபொம்மன் பிப்ரவரி 2ஆம் தேதி. 1790ஆம் ஆண்டில் 47வது பாளையக்காரராக அரியணை பொறுப்பை ஏற்றார். வீரபாண்டிய கட்டபொம்மன் அரியணை பொறுப்பை ஏற்ற அதே சமயத்தில் ஆங்கிலேயர்கள் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கினர்.

பாளையக்காரர்கள் அனைவரிடமிருந்து கப்பம் பெற்றுக்கொண்ட ஆங்கிலேயர்களால் கட்டபொம்மனிடம் தங்கள் சர்வாதிகாரம் பலிக்காமல் அவமானம் அடைந்தனர். அதனால் சமாதானம் பேசுவது என்ற போர்வையில் கட்டபொம்மனுக்கு தூது அனுப்பினார்கள். ஜாக்சன் துரை என்பவர் வரி கட்டுமாறு கட்டபொம்மனை பணித்தார். ஆனால் கட்டபொம்மன் ஜாக்சன் துரையிடம் நாங்கள் ஏன் வரி கட்ட வேண்டும் என்று எதிர்த்துப் பேசினார். அங்கே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியாகி தகராறில் முடிந்தது. ஆங்கிலேயரின் இந்த திட்டமிட்ட வஞ்சக வலையில் சிக்காமல் தன் வீரத்திறமையால் அங்கிருந்து தப்பினார். வீரபாண்டிய கட்டபொம்மனது வீரமும், விவேகமும் சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவி, அனைவர் மனதிலும் வீரத்தை விதைத்தது.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பின் கைது செய்யப்பட்டார். பின் கயத்தாறு கிராமத்தில் புளிய மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென ஆங்கிலேய அரசு அறிவித்தது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை கட்டபொம்மன் மறுக்கவில்லை. கேட்கவுமில்லை. மாறாக கம்பீரத்தோடு எனது தாய்மண்ணைக் காப்பதற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையக்காரர்களைத் திரட்டினேன். போர் நடத்தினேன் என்று முழங்கியவாறு தூக்குமேடையேறினார். தூக்குமேடை ஏறிய போதும், அவரது பேச்சில் வீரமும் தைரியமும் நிறைந்திருந்தது. அக்டோபர் 19ஆம் தேதி. 1799 ஆம் ஆண்டில் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன