உள்ளூர் செய்திகள்தேர்தல் 2026

தூத்துக்குடி: 2 அமைச்சர்கள்; 6 தொகுதிகள் – தக்க வைக்குமா திமுக? போராடும் அதிமுக! முந்துவது யார்?

Share the news

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி:

முன்னொரு காலத்தில் முத்துக்குளிக்கும் தொழில் நடந்து வந்ததால் தூத்துக்குடிக்கு ’முத்துநகர்’ என்ற பெயரும் உண்டு. மாநகரட்சி பகுதியையும், இந்தியாவின் முக்கியத் துறைமுகங்களில் ஒன்றான வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தையும் உள்ளடக்கியது. பல்வேறு தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்கள், உப்பளங்கள் நிறைந்துள்ளது.
சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் தொழில்நகரமாகவும் திகழ்கிறது. மீன் பிடித்தல், ஏற்றுமதி, இறக்குமதி  ஆகியவையும் பிரதானத் தொழிலாக உள்ளது. சாலை, விமானம், ரயில், கப்பல் ஆகிய நான்கு வகை போக்குவரத்து வசதிகளையும் பெற்ற தொகுதி. முந்தைய தேர்தலில் தி.மு.க வேட்பாளராக களமிறக்கப்பட்ட அமைச்சர் கீதாஜீவன் வெற்றி பெற்றார்.
வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இந்துநாடார், கிறிஸ்தவ நாடார், மீனவர்கள் உள்ளனர். அவர்களுடன் முஸ்லீம்கள், ஆதி திராவிடர்கள், வேளாளர்கள் ஆகியோரும் கலந்து  வசிக்கின்றனர். தி.மு.க சார்பில் கீதாஜீவனே மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்பிருக்கிறது. அ.தி.மு.கவைப் பொறுத்தவரையில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் மத்திய கூட்டுறவு சங்க தலைவர் சுதாகர், வழக்கறிஞர் பிரபு ஆகியோரும் மோதுகின்றனர்.
த.வெ.க சார்பில் அஜிதா ஆக்னல், எஸ்.டி.ஆர்.சாமுவேல் ஆகியோரில் ஒருவர் போட்டியிடலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், விஜய்யின் நெருங்கிய நண்பர் நடிகர் ஸ்ரீநாத் போட்டியிடலாம் என்கிறார்கள்.

எளிதான அணுகுமுறை, தொகுதிக்குள் வலம் வருவது, கட்சியின் பலம், வலுவில்லாத எதிர்கட்சி ஆகியவற்றின் காரணமாக தற்போதைய சூழலில் மீண்டும் உதய சூரியன் உதிக்கும் நிலைதான் தெரிகிறது.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  6 தொகுதிகளில் திருச்செந்தூர் தொகுதி முக்கியமானது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயில், இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக  தமிழகத்தில் வெகு விமரிசையாக தசரா திருவிழா நடைபெறும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் ஆகியவற்றை உள்ளடக்கியது.

நெல், வாழை, முருங்கை, வெற்றிலை விவசாயம், உப்பு உற்பத்தி, கருப்பட்டி உற்பத்தி  என பன்முகத்தன்மை கொண்ட தொழில்கள் நடக்கிறது.  இந்தியாவில், ஆந்திரா மாவட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு  மையத்திற்கு அடுத்தபடியாக, சிறிய ரக விண்கலங்களை விண்ணில் ஏவும் வகையில் அமைக்கப்பட்டு வரும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் இத்தொகுதிக்குள் அடங்குகிறது.
கடந்த 1952-ம் ஆண்டு இத்தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பில் சாத்தான்குளம் தொகுதி நீக்கப்பட்டதால், திருச்செந்தூரை ஒட்டியுள்ள சில பகுதிகள் இத்தொகுதியுடன் இணைக்கப்பட்டன. கடந்த 2001-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை 4 பொதுத்தேர்தல், ஒரு இடைத்தேர்தல் என 5 தேர்தல்களில் வெற்றி பெற்று  தொடர்ந்து 25 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக நாடார், பட்டியலித்தினர், பரதர்கள், இஸ்லாமியர்கள் உள்ளனர். இவர்களுடன் கிறிஸ்தவர்களும் கலந்து வசிக்கின்றனர். தி.மு.க சார்பில் மீண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே களமிறங்குவார் எனக் கூறப்படுகிறது. அ.தி.மு.க கூட்டணியில் இத்தொகுதி பா.ஜ.கவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் களமிறங்குவார் என்கிறார்கள்.
பெண்கள், இளைஞர்களைக் கவரும் வகையில், கடந்த 3 மாதங்களாகவே குபேரபூஜை, குலுக்கல் பரிசு, மின்னொளி கபாடிப் போட்டி, கோலப்போட்டி என தொகுதிக்குள் பல வித போட்டிகளை நடத்தி பரிசுகளை வாரி வழங்கி வருகிறார். வலுவில்லாத எதிரணி, சிறுபான்மையினரின் பலமான வாக்கு வங்கி ஆகியவற்றால் தற்போதைய கள நிலவரப்படி மீண்டும் உதய சூரியன் உதிக்கவே வாய்ப்புள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன