உள்ளூர் செய்திகள்செய்திகள்

தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரியில் மே.4ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

Share the news

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 04.05.2026 அன்று தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தனது அறிக்கையில் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் – 2026 பதிவான வாக்குகளை எண்ணும் பணி 04.05.2026 அன்று வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் தூத்துக்குடி மாவட்டத்தில் 23.04.2026 அன்று நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 04.05.2026 (திங்கட்கிழமை) அன்று வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8:00 மணிக்குத் துவங்கும். முதலில் காலை 8:00 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கும். 30 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு இ.வி.எம் – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி துவங்கும். இ.வி.எம் – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் சுற்றுகளில், கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி, தபால்வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன் தான் துவங்கப்படும்.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஒரு பகுதியில் தபால் வாக்குகளும், மற்றொரு பகுதியில் இ.வி.எம் – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளும் அதற்குரிய மேசைகளில் எண்ணப்படும். இரண்டிற்கும் தனித்தனியாக மேற்பார்வைக்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அளவில் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட காவல்துறை சார்ந்த அலுவலர்கள், மேலும் சோனல் செக்டார் பகுதிகளில் பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுக்களில் பணியாற்றிய அலுவலர்கள் ஆகியோர் சேர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 15,264 தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குகளாக வாக்களித்துள்ளனர்.

மேலும், 5,646 அலுவலர்கள் தேர்தல் பணிசான்றிதழ் பெற்று நேரடியாக வாக்குச்சாவடிகளில் வாக்களித்துள்ளனர். 85+ வயதுடையோர் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் அளித்த படிவம் 12D விண்ணப்பத்தின் பேரில், மொத்தம் 5,998 வாக்காளர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களித்துள்ளனர். இதுவரை சேவை வாக்காளர்கள் 499 நபர்கள் வாக்களித்துள்ளனர்.

இவர்களின் தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை நாளான 04-05-2026 (திங்கட்கிழமை)அன்று காலை 8:00 வரை பெறப்படும். வாக்குச்சாவடிகளில் வாக்களித்த வாக்காளர்கள் 11,17,478 (80.5%) மட்டுமின்றி, கூடுதலாக 21,761 வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களிடமிருந்து வாக்குகள் பெறப்பட்டுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன