அண்மை செய்திகள்செய்திகள்

தூத்துக்குடி ரவுடியை சுட்டு பிடித்த போலீசார் மோதலில் எஸ்ஐ காயம்

Share the news

தூத்துக்குடியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 29 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியைப் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இந்த மோதலில் உதவி ஆய்வாளர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மினி சகாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டோம்னிக் மகன் மரிய ஆக்னல் (36). இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 29க்கும் மேற்பட்ட வழக்குகள் தூத்துக்குடி நெல்லை குமரி மாவட்டங்களில் நிலுவையில் உள்ளன. தனது மனைவியை கொலை செய்தது உட்பட நான்கு கொலை வழக்குகளும் உள்ளன. பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளியான மரிய ஆக்னல், கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய பகுதியில் பொது சொத்தை சேதப்படுத்தியது சம்பந்தமாக தூத்துக்குடி போலீசார் இவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் திருச்செந்தூர் அருகேயுள்ள சோனகன்விளை அடுத்த காணியாளன் விளை கிராமத்தில் ஒரு வீட்டில்பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற உதவி ஆய்வாளர் ராஜ பிரபு தலைமையிலான போலீசார், ரவுடி மரிய ஆக்னலை கைது செய்ய முயன்றனர். அப்போது, ஆக்னல் தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியால் உதவி ஆய்வாளர் ராஜ பிரபுவை நோக்கிச் சுட்டுள்ளார். இதில் எஸ்ஐ சிறிய காயத்துடன் தப்பினார். இதனையடுத்து, தற்காப்புக்காகவும் குற்றவாளி தப்பிவிடாமல் இருக்க எஸ்ஐ ராஜ பிரபு தனது துப்பாக்கியால் ரவுடி மரிய ஆக்னலைச் சுட்டுப் பிடித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த உதவி ஆய்வாளர் ராஜ பிரபு மற்றும் ரவுடி மரிய ஆக்னல் ஆகிய இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் மதன் மருத்துவமனைக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். இது குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன