Uncategorized

முதல்வர் விஜய்யுடன் மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி சந்திப்பு

Share the news

தமிழக முதல்வர் விஜய்யை மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

தமிழ்நாட்டின் புதிய முதல்வர் விஜய்யை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் நேரில் சந்தித்துத் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது, வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குகா எழுதிய ‘காந்தி பிஃபோர் இந்தியா’ (Gandhi Before India) என்ற புத்தகத்தை முதல்வருக்கு கமல்ஹாசன் எம்பி பரிசாக வழங்கினார். மேலும் மாநில வளர்ச்சி, தற்போது உள்ள சவால்கள், தடைகளை எதிர்கொண்டு வரும் தமிழ்த் திரைப்படத் துறையின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசின் முழுமையான ஆதரவும் அரவணைப்பும் அவசியம் என்பதை கமல்ஹாசன் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

முக்கியமான ஆறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கமல்ஹாசன், முதல்வர் விஜய்யிடம் கொடுத்துள்ளார். இது குறித்து கமல்ஹாசன் எம்பி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய அன்பு நெகிழ்ச்சியளித்தது. பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன