ஸ்ரீவை தொகுதி வளர்ச்சி குறித்து கலெக்டர், எம்.எல்.ஏ. சரவணன் ஆலோசனை
ஸ்ரீவைகுண்டம் தொகுதி வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கலெக்டருடன் எம்.எல்.ஏ. கு.சரவணன் ஆலோசனை.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகப் புதிதாகப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கு.சரவணன், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனுக்கு, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் கு.சரவணன் பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து வழங்கினார். தொடர்ந்து எம்.எல்.ஏ வுக்கு கலெக்டர் புத்தகம் வழங்கி வரவேற்றார். பின்னர் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி வளர்ச்சித் திட்டங்கள், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைள், சுகாதாரம், குடிநீர், பொது போக்குவரத்து, குடிமைப் பொருள் வழங்கல் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து செயல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியருடன் கு.சரவணன் எம்.எல்.ஏ. ஆலோசனைகளை மேற்கொண்டார். உடன் ஸ்ரீவை வடக்கு ஒன்றிய தவெக செயலாளர் பொன்ராஜ், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் மணிவண்ணன் உடனிருந்தனர்.
