கோடையிலும் தினசரி குடிநீர் தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பேச்சு
கோடை காலத்திலும் தினசரி குடிநீர் வழங்கி வருகிறோம் தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் நடைபெறும் முதல் மாமன்றக் கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்;
தூத்துக்குடி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு நான்கரை ஆண்டு காலம் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய முன்னாள் முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தூத்துக்குடி மாநகரில் ஏழு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் இருந்த நிலையை மாற்றி மொத்தமுள்ள 60 வார்டுகளில் 38 வார்டுகளுக்கு தினசரி குடிநீர் விநியோக வசதி செய்யப்பட்டுள்ளது. 17 வார்டுகளில் ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் என கோடை காலத்திலும் சிறந்த முறையில் வழங்கப்படுகிறது. ஒருசில வார்டுகளில் மட்டுமே குடிநீர் பற்றாக்குறை உள்ளது. அதுவும் விரைவில் சீரமைக்கப்படும். எனவே, பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முக்கிய நீர்வழி தடமான பக்கிள் ஓடை விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அங்குள்ள அம்மா உணவகத்தை வேறொரு இடத்திற்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் 53 பூங்காக்கள், மகளிர் பூங்காக்கள் சிறப்பாக பராமரிப்பு செய்யப்பட்டும், உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய சிறிய விளையாட்டு திடல்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாநகரில் சாலை வசதிகள் முழுமையாக அமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பிரதான சாலைகள் மற்றும் அண்ணாநகர், பிரையன்ட் நகர் பகுதியில் எண்ட் டு எண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 60 வார்டுகளிலும் 28,800 தெருவிளக்கு வசதிகள் உள்ளன. இதில் பழுதாகி உள்ள 300 விளக்குகள் விரைவில் சரி செய்யப்படும். மாநகரப் பகுதிகளில் வீடுகளில் சேரும் குப்பைகள் தினசரி தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது இந்த குப்பைகளை பொதுமக்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை என்ன பிரித்து கொடுக்க வேண்டும்.
தென்மேற்கு பருவமழை காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி நடப்பு நிதியாண்டில் மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் உள்ள வார்டு அலுவலகங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுக் கட்டிடங்களைப் புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு, தற்காலிக பணியாளர்களின் ஊதியம் உள்ளிட்ட 48 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் சரவணகுமார், இசக்கி ராஜா, முத்துவேல், சந்திரபோஸ், அதிமுக வீரபாகு ஆகியோர் தங்களது வார்டுகளின் கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
