தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு. கீதாஜீவன் பேட்டி
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் சொந்த கட்சி பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை! சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, தவெக’வினரின் அட்ரா சிட்டி கூத்துகளும், மிரட்டல் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் திமுக முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம்’ என்பது ஒரு ஆடியோ லான்ஞ்ச் நிகழ்ச்சி போலதான் இது புதிய திட்டம் அல்ல. அது ஏற்கனவே திமுக ஆட்சிக் காலத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட திட்டமாகும்.
இதற்குத் தற்போதைய தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டி, புதிய திட்டம் போல விளம்பரம் செய்து கொள்கிறது. பெண்களின் பாதுகாப்பு குறித்து மேடைகளில் பேசும் முதல்வர் விஜய், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ள தனது நீண்ட கால ரசிகையும் சொந்தக் கட்சிக்காரருக்கு தக்க பதில் சொல்வாரா முதல்வர் விஜய்?
ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய தவெக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது முதல்வர் விஜய் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? இனிமேலாவது உரிய நடவடிக்கை எடுப்பாரா? தவெக தலைவர்கள் பேசும் தனிமனித ஒழுக்கத்திற்கும், அவர்களின் கட்சியினரின் செயல்படுவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
தவெகவினர் மருத்துவமனை, பள்ளிக்கூடம், அரசு அலுவலகங்கள் என எங்கு சென்றாலும் அவர்களின் மிரட்டல்களும், அடாவடிச் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தாங்கள் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்று அரசு அலுவலர்களை நேரடியாக மிரட்டி வருகின்றனர். மேலும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் மதுபானக் கடைகளை மிரட்டி, தவெகவினர் தொடர் பண வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தற்பொழுது நிலவி வரும் கடுமையான மின்சாரத் தட்டுப்பாட்டிற்குத் தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளே காரணம், தற்பொழுது ஊடகச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் 3 முக்கிய செய்தி தொலைக்காட்சி சேனல்களை தவெக அரசு முடக்கி ஜனநாயகத்தின் குரல்வலையை நசுக்கி உள்ளது. ஆதவ் அர்ஜுனா தன் மீதுள்ள குற்றங்களை மறைப்பதற்காகவே தொடர்ந்து தேவையின்றி சவடால் பேசி வருகிறார். தற்போதைய சூழலில் திமுக தலைவர் முக.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக மிகவும் ஆக்கப்பூர்வமாகவும், பொறுப்புடனும் செயல்பட்டு வருகிறது என்று கீதா ஜீவன் தெரிவித்தார்.
பேட்டியின் போது, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், நிர்மல்ராஜ் மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கவிதா தேவி, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயகனி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண் குமார், பொறியாளர் அணி தலைவர் பழனி, கவுன்சிலர் விஜயகுமார் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், ஐடி விங் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பிரபு, தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஐ.ரவி, சூர்யா, பிரதிநிதி பாஸ்கர் உடனிருந்தனர்.
